தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயார் நிலையில் உள்ளது. விருப்ப மனு வாங்குவதற்கு அதிமுக, திமுக அடுத்தபடியாக தேமுதிகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் துவக்கத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த சூழலில் அதிமுகவில் ஜெயலலிதா பிறந்த நாளான 24ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில் தமிழக சட்டமன்ற தொகுதியில் ரூபாய் ரூ.15,000, தனி தொகுதிக்கு 10,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதுச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணமும், தனித்தொகுதிக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.