சேலம்: கொடிக்கம்பம் நடுவதில் மோதல்! எஸ்.பி.யின் மண்டையை உடைத்த வி.சி.க.வினர்!
விசிக மண்டல செயலாளர் நாவரசன், வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்கள் கே.மோரூரில் திரண்டு, கொடிக்கம்பம்ங்கள் இருக்கும் இடத்தில் விசிக கொடிக்கம்பத்தை நடுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
By : Thangavelu
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்துள்ள கே.மோரூர் பேருந்து நிறுத்தம் அருகே விசிக சார்பில் கொடிக்கம்பம் நடுவதற்காக எஸ்.பி. மற்றும் வருவாய்த்துறையினரிடம் அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதால் புதிதாக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதியில்லை என்றும், ஏற்கனவே அங்கு உள்ள கம்பங்களை அகற்றுவதற்கும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் விசிக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று காலை விசிக மண்டல செயலாளர் நாவரசன், வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்கள் கே.மோரூரில் திரண்டு, கொடிக்கம்பம்ங்கள் இருக்கும் இடத்தில் விசிக கொடிக்கம்பத்தை நடுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த மற்ற கட்சியினர் திரண்டு வந்து கொடிக்கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு தாசில்தார் வாசுகி மற்றும் ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையிலானபோலீசார் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் நடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போது விசிகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மற்ற விசிக தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் கூடுதல் எஸ்.பி. செல்வம், எஸ்.ஐ. அருள்வடிவழகன் உள்ளிட்ட 6 போலீசாருக்கு மண்டை மற்றும் கை, கால்கள் மீது காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. அபிநவ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்வதற்கு போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதில் விசிகவை சேர்ந்த பாண்டியன், கேசவன், கருணாகரன் உள்ளிட்ட 17 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source, Image : Polimer, Dinakaran