சாட்டை துரைமுருகன் மீது புகார் கொடுத்தவர் தி.மு.க.வில் ஐக்கியம்.!
திருச்சி, கே.கே.நகரில் கார் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் வினோத். இவர் சமீபத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தார்.
By : Thangavelu
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் திமுகவில் இணைந்துள்ளார். இவர் அளித்த மிரட்டல் புகாரில் யூட்யூப்பர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
திருச்சி, கே.கே.நகரில் கார் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் வினோத். இவர் சமீபத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தார். இதனால் கோபமடைந்த சாட்டை துரைமுருகன், வினோத்தின் கார் மெக்கானிக் கடைக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் பதிவிட்ட செய்தியை மீண்டும் மறுப்பு பதிவை செய்ய வைத்தனர்.
இதனை சாட்டை துரைமுருகன் உள்ளிட்டவர்கள் செல்போனில் படம் எடுத்தனர். இதனிடையே தன்னை கார் மெக்கானி கடைக்கு வந்து மிரட்டல் விடுத்ததாக வினோத் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வினோத், சரவணன், மகிழன் சந்தோஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் கடந்த 15ம் தேதி பிணை வழங்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் சாட்டை துரைமுருகன் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே உள்ளார். மொத்தம் உள்ள 3 வழக்குளில் ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் பெற்றுள்ளார். மற்ற இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சாட்டை துரைமுருகன் மீது முதலில் புகார் அளித்த கார் மெக்கானிக் உரிமையாளர் வினோத் சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனை வினோத் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.