யாரை ஏமாற்ற ஒப்புக்கு தீர்மானம் போடுறீங்க ! - தி.மு.க'வை கிழிக்கும் சீமான் !
Breaking News.
By : Mohan Raj
"நீட் விவகாரத்தில் வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்கிறேன்" என நாம் தமிழர் கட்சியின் சீமான் தி.மு.க'விற்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "நீட்' தேர்வு அச்சத்தில் சேலம், மேட்டூரையடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி தனுஷ் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். ஏற்கனவே, தங்கை அனிதா உள்ளிட்ட 13 பச்சிளம் பிள்ளைகள் நீட் தேர்வினால் பலியாகி அதற்கான நீதியே இன்னும் கிடைத்திடாத துயர்மிகு நிலையில் தம்பி தனுசும் உயிர்துறந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெருஞ்சோகத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது.
தி.மு.க ஆட்சியமைந்தால், நீட் தேர்வை உறுதியாக ரத்து செய்து விடுவோமென்றும், அதற்கென இரகசியத்திட்டம் வைத்திருக்கிறோமென்றும் மனம்போன போக்கில் தேர்தல் பரப்புரையில் கதையளந்துவிட்டு இப்போது முற்றாகக் கைவிரித்து மாணவர்களை ஏமாற்றியிருக்கும் திமுக ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்வாண்டில் செப்டம்பர் மாதம் போல நீட் தேர்வு நடத்தப்படலாம் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பும் முன்முடிவை விரைந்து எடுக்க வேண்டிய அரசு, அதனைச் செய்யாது தள்ளிப்போட்டது திட்டமிட்டச் சூழ்ச்சியேயாகும். பா.ஜ.க அரசிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து, தமிழர் விரோதத் திட்டங்களை முழுதாக ஏற்று, அவற்றினை தமிழகத்திற்குள் உள்நுழைவு செய்திட துணைநின்றிட்ட முந்தைய அ.தி.மு.க அரசின் கோழைத்தனத்தை அடியொற்றும் தி.மு.க அரசின் நழுவல் போக்கு வெளிப்படையான பிழைப்புவாத அரசியலாகும்.
ஒப்புக்குத் தீர்மானத்தை இயற்றி, இவ்விவ காரத்தைக் கடத்தி, மக்களின் மறதியை அடிப்படையாகக் கொண்டு வழமையான பிழைப்புவாத அரசியலை செய்ய முற்பட்டால் வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்கிறேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.