SG சூர்யா கைதுக்கு சொல்லப்படும் காரணம் என்ன?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து, அவதூறு வழக்கில் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டார்.
கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் பறிபோன தூய்மை பணியாளர் உயிர் என்ற தலைப்பில் மதுரை எம்பி வெங்கடேசனை கண்டித்து எஸ்.ஜி. சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிக்கையில் SG சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது,
"புரச்சீ போராளி, விளம்பர அரசியல் பிரியர் மதுரை எம்.பி திரு.சு வெங்கடேசன் அவர்களுக்கு வணக்கம்!
மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விசுவநாதன், மலம் கலந்த நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று பின்னர் சிகிச்சை பலனின்றி தூய்மை பணியாளர் ஒருவர் இறந்துள்ளார். சட்டப்படி குற்றம் என தெரிந்தும் அந்த பாவப்பட்ட தூய்மை பணியாளரை அந்த கழிவு நீர் கால்வாயில் இறங்கி வேலை செய்ய சொன்னது உங்கள் சக தோழர், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் விசுவநாதன் தான். இறந்தவர் பட்டியலின சகோதரர்.
எங்கே உங்கள் செங்கொடி? எங்கே உங்கள் போராட்ட குணம்?
எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்?
ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக் கொண்டு வருவீர்கள், இப்பொழுது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா? அல்ல பம்மி விட்டீர்களா? ஏன் உங்களது செங்கொடி உங்கள் சக தோழர்களுக்கு எதிராக ஏறாதா? அல்லது உங்கள் செங்கொடி பட்டியலின சமுதாயதய சகோதரர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராடாதா?
பிரிவினைவாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது, மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே!"
என அறிக்கையில் சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அவதூறாக எடுத்துக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரை போலீசில் சூர்யா மீது புகார் கொடுத்தனர்.
சென்னை வந்த மதுரை போலீசார் சூர்யாவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். என்ன காரணம் என்று கூட முதலில் சொல்லாமல், ஒரு குற்றவாளியை போல அழைத்து சென்றனர்.
அவரை மதுரை அழைத்து சென்றபோலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்பு திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ். ஜி. சூர்யா மீது 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இருபிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாகவே பாஜக பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியை சேர்ந்த செல்வ பாலன், காஞ்சிபுரம் பாஜக தலைவர் என அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.