Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல் தரகர் வைகோ அவர்களுக்கு அண்ணாமலை பெயரை உச்சரிக்கக் கூட தகுதியில்லை - விளாசும் எஸ்.ஜி.சூர்யா !

அரசியல் தரகர் வைகோ அவர்களுக்கு அண்ணாமலை பெயரை உச்சரிக்கக் கூட தகுதியில்லை - விளாசும் எஸ்.ஜி.சூர்யா !
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Nov 2021 2:15 AM GMT

"அரசியல் தரகர் வை.கோ அவர்களே! நீங்கள் தி.மு.க'விடம் அடமானம் இருப்பது போன்று இல்லாமல் நேர்மையான அரசியல் பேசும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திகொள்ளுங்கள்" என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக பா.ஜ.க தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கையாலாகாத தமிழக தி.மு.க அரசு, கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு எப்படியெல்லாம் விலைபோனது என்பதை படம் பிடித்துக் காட்டினார். பேபி அணை பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் திரு.பிணராய் விஜயன் அனுமதி அளித்துள்ளதாக கூறி அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அப்படி ஒரு அனுமதியை கேரள கம்யூனிஸ்ட் அரசு வழங்கவில்லை என பின்வாங்கி, பிறகு தங்களுக்கு தெரியாமல் அனுமதி வழங்கப்பட்டது என பல்டியடித்து அந்த அனுமதியை திரும்பப்பெற்று, அதை வழங்கிய அதிகாரியை பணி நீக்கமும் செய்துள்ளது.


கேரள அரசு அனுமதி அளித்துள்ளதா, இல்லையா என்பதை கூட தெரியாத ஒரு திறமையற்ற முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது என்பதை நவம்பர் 8-ஆம் தேதி தேனியில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க-வின் "முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தில்" அம்பலப்படுத்தினார் திரு.அண்ணாமலை.

அதோடு அணையின் நீர்மட்டம், 152 அடியாக இருந்த போது 2.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது என்பதையும், அதன் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்ட பின்னர் பாசன பரப்பளவு 71,000 ஏக்கராக சுருங்கி விட்டது என்ற உண்மையையும் தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறினார். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் தி.மு.க-வால் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் பட்டியலிட்டார். கையாலாகாத தி.மு.க அரசால் இப்போது முல்லைப் பெரியாறு அணை உரிமையை எப்படியெல்லாம் பறிகொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதோடு, முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் கோபாலபுரத்து குடும்பத்திற்கு நிலம் எதுவும் இல்லை. ஆகவே தான் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணை உரிமையை கேரளாவுக்கு தாரைவார்த்து விட்டார் என்ற உண்மையையும் போட்டு உடைத்தார்.

இவைகளுக்கு நேரடியாக பதில் சொல்ல திராணி இல்லாத முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், தன் அறிவாலயத்துக்கு விலைபோனவர்களில் ஒருவரான திரு.வைகோவை ஏவி விட்டுள்ளார். அவரும் தன் பங்கிற்கு தனது எஜமானியை விஸ்வாசத்தை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

திரு.வைகோ அவர்கள் தனக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியை தூக்கி வீசிய கோபாலபுரத்து குடும்பத்திற்கு தனது விஸ்வாசத்தை வெளிப்படுத்திவிட்டு போகட்டும். அதில் பா.ஜ.க தொண்டர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர் தனது அளவுகடந்த விஸ்வாசத்தை வெளிப்படுத்த பா.ஜ.க மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை இழிவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திரு.அண்ணாமலை தன்னை ஒரு நேர்மையான காவல்துறை உயர் அதிகாரி என்பதை நிரூபித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார்.

நேர்மைக்கும், உண்மைக்கும் சம்பந்தமே இல்லாத திரு.வைகோ அவர்களுக்கு திரு.அண்ணாமலை அவர்களை பற்றிப் பேசுவதற்கு ஒரு அருகதை இருக்க வேண்டாமா?

இந்த நேரத்தில் திரு.வைகோ அவர்களுக்கு நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். கொள்கை முதிர்வோடு தற்போது வயது முதிர்வும் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவருக்கு அதிக மறதி ஏற்பட்டிருக்கலாம். ஆகவே அவற்றையெல்லாம் நினைவூட்ட வேண்டியது எங்களின் கடமை.

திரு.வைகோ அவர்களே, தி.மு.க-வின் போர்வாளாக இருந்த நீங்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க என்ற கட்சியை தொடங்கியதற்கு என்ன காரணம்? மகன் மு.க.ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட கருணாநிதி திட்டமிட்டார் என்பது தானே? தி.மு.க-வில் ஜனநாயகம் இல்லை என்பதுதானே குற்றச்சாட்டு?

அப்போது உங்களை நம்பி உங்களுக்காக எத்தனை பேர் தீக்குளித்து மாண்டார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் எதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள் என்பதாவது உங்கள் நினைவில் மிச்சம் இருக்கிறதா? யாரை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினீர்களோ இன்று அதே மு.க.ஸ்டாலின், தி.மு.க-வின் தலைவரான பிறகு, அவர் தூக்கி வீசும் சில சீட்டுகளுக்காக அவரிடம் சரணாகதி அடைந்திருப்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?


வாரிசு அரசியல் கூடாது என்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு பாடம் நடத்தி விட்டு, அதற்காகத்தான் ம.தி.மு.க என்ற கட்சியை தொடங்கி உள்ளேன் என்று வாய் கூசாமல் அடுக்கு மொழியில் பேசிவிட்டு, இப்போது கிஞ்சித்தும் வெட்கமின்றி உங்கள் மகனையே ம.தி.மு.க-வின் அடுத்த வாரிசாக மகுடம் சூட்ட உள்ளீர்களே? உங்களுக்கு பழைய கதை மறந்து விட்டதா? பழைய கொள்கைகள் காற்றில் பறந்து விட்டதா?

அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்றெல்லாம் உங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகளாக அறிவித்தீர்களே, இதில் ஏதாவது ஒன்று இப்போது உங்களிடம் இருக்கிறதா? இவற்றையெல்லாம் எப்போதோ நீங்கள் அடகு வைத்து விட்டீர்களே? அதுவாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

இன்றைய இளைஞர்களின் மிகச்சிறந்த வழிகாட்டி திரு.அண்ணாமலை அவர்கள்தான் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தெரியும். அது அரசியல் அனாதையான உங்களுக்கு தெரியுமா?

தற்போதைய நிலையில் நீங்கள் ஒரு அரசியல் தலைவர் என்று சொல்வதற்கு தகுதி உள்ளவர்தானா என்பதை உங்கள் மனசாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்(மனசாட்சி என்று ஒன்று இருந்தால்!).

மன்னித்து விடுங்கள் திரு.வைகோ, உங்களுக்கு ரியல் சிங்கம் திரு.அண்ணாமலை அவர்களின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அருகதை கிடையாது. ஒரு காலத்தில் வேண்டுமானால் நீங்கள் உத்தமராக இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்? தமிழக மக்கள் மனங்களில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழக மக்கள் உங்களை அரசியல் தரகர் என்று வர்ணிக்கிறார்களே அதுவாவது உங்களுக்கு தெரியுமா? "அண்ணாமலை முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது" என்று கூறி உள்ளீர்கள். கம்பீரமான போலீஸ் வேலை பார்ப்பதில் தவறில்லை. ஆனால், தரகர் வேலை பார்ப்பதுதான் தவறு. அவர் நேர்மையான போலீஸ் உயரதிகாரியாக வாழ்ந்தார் என்பது கடந்தகால வரலாறு. ஆனால், நீங்கள் தரம் தாழ்ந்த அரசியல் தரகராக வாழ்கிறீர்கள் என்பது நிகழ்கால உண்மை, நாளைய வரலாறு.

பச்சைத்தமிழன் திரு.அண்ணாமலை அவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி ஒன்றும் தெரியாது என்கிறீர்கள். திராணி இருந்தால், நீங்களோ அல்லது உங்களை ஏவி விடும் உங்கள் எஜமானர் கோபாலபுரத்து கோமகன் திரு.ஸ்டாலின் அவர்களோ திரு.அண்ணாமலை அவர்களுடன் பொது விவாதத்திற்கு வாருங்கள். யார் தமிழன்? யார் உண்மையான தமிழன்? யார் நேர்மையான தமிழன்? யார் திறமையான தமிழன்? என்பதையெல்லாம் நேரடியாக விவாதித்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

திரு.அண்ணாமலை இப்போதுதான் வாயை திறந்து இருக்கிறார். அதற்குள்ளாகவே அவரது வாயை மூட சொல்கிறீர்கள். அப்படியானால் அவர் பேசத் தொடங்கினால், தி.மு.க-விற்கும், அதற்கு விலைபோன கட்சிகளுக்கும் என்ன நிலை ஏற்படுமோ தெரியவில்லையே?

மரியாதைக்குரிய திரு.வைகோ அவர்களுக்கு நான் இறுதியாக சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். ஒரு இளம் அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் திரு.அண்ணாமலை அவர்கள். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் நீங்கள்.

எங்கள் மரியாதைக்குரிய தலைவர் திரு.அண்ணாமலை அவர்களிடமிருந்து மரியாதையை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். எஜமானிய விஸ்வாசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று பா.ஜ.க-வையோ, எங்கள் தலைவர்களையோ வம்புக்கு இழுப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதுதான் உங்களுக்கு அழகு" என காட்டமாகவே தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ன கட்சியே மறைந்த தி.மு.க தலைவர் கருணாநித அவர்கள் நடவடிக்கைகள் பிடிக்காமல் துவங்கப்பட்ட கட்சி என்பதும், இன்றைக்கு வைகோ அதே தி.மு.க'வில் ராஜ்யசபா எம்.பி பதவியை வாங்கி கொண்டு சொகுசாக வாழ்வதும் குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News