Kathir News
Begin typing your search above and press return to search.

போராடி பெற்ற முல்லை பெரியாறு உரிமையை ஸ்டாலினின் தி.மு.க அரசு தாரை வார்த்துவிட்டது - பொங்கும் சீமான் !

போராடி பெற்ற முல்லை பெரியாறு உரிமையை ஸ்டாலினின் தி.மு.க அரசு தாரை வார்த்துவிட்டது - பொங்கும் சீமான் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 Oct 2021 7:00 AM GMT

"பல ஆண்டுகள் போராடிப்பெற்ற உரிமையினை ஒரே இரவில் ஒட்டுமொத்தமாகத் தாரை வார்த்துள்ளது தி.மு.க அரசு" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான் குறிப்பிட்டுள்ளதாவது, "முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் கேரள அமைச்சர்களின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி முல்லைப்பெரியாறு அணையின் நீரை வீணாகக் கடலில் கலக்கச்செய்து, பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்துள்ள கேரள அரசின் அடாவடிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

முல்லைப்பெரியாறு நிலப்பகுதியை தமிழர்கள், கேரளாவிடம் இழந்தபோதும், அணைப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் இன்றளவும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நீர் திறப்புப்பணிகளை தமிழகப் பொதுப்பணித்துறைதான் மேற்கொள்கிறது. ஆனால், இதுவரை இல்லாத நடைமுறையாக கேரளா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் அத்துமீறி முல்லைப்பெரியாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்திருப்பது தமிழ்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலேயாகும். கேரள அரசின் இத்தகைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாது, கேரளாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்ததோடு, அதனை நியாயப்படுத்த முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வெட்கக்கேடானது.

அணைப்பராமரிப்பு உரிமை இன்னும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும்போது நீர்த்திறப்பின்போது தமிழகத்தின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்காதது ஏன்? கேரளா அமைச்சர்களின் அத்துமீறலை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சட்டத்தின் துணையுடன் கேரள அரசின் வஞ்சகச் செயலை முறியடித்திருக்க வேண்டிய தி.மு.க அரசு, அதனைச் செய்யத்தவறியது அரசின் நிர்வாகத்திறமையின்மையையும், அலட்சியப்போக்கையுமே வெளிக்காட்டுகிறது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டல்படியே எல்லாம் நடைபெறுகிறது என அத்துமீறி அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் செயலை நியாயப்படுத்தி தி.மு.க அரசு சப்பைக்கட்டு கட்டுவது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுஞ்செயலாகும். எதிர்காலத்தில் இதனைக் காரணம் காட்டியே, அணையின் நீர் மட்டம் 136 அடியைத் தாண்டாதவாறு கேரள அரசு முட்டுக்கட்டை இடுவதற்கு வாய்ப்பளித்துள்ளதன் மூலம், பல ஆண்டுகள் போராடிப்பெற்ற உரிமையினை ஒரே இரவில் ஒட்டுமொத்தமாகத் தாரை வார்த்துள்ளது தி.மு.க அரசு" என காட்டமாகவே அறிக்கை விடுத்துள்ளார்.

Source - @seemanofficial

Next Story
கதிர் தொகுப்பு
Trending News