'தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் இந்து அல்ல, அவர் எப்படி கோவில் திருவிழாவில் பங்கேற்கலாம்' என நீதிமன்றத்தில் வழக்கு
By : Thangavelu
மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசுகின்ற பா.ஜ.க. மதவாதிகளுக்கு ஒரு பாடம். பா.ஜ.க.வின் மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயிலில் தேர் வடம்பிடிக்கச் சென்ற அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்துக்களுக்கு எதிராக பேசும் தி.மு.க.வினர் கோயில் விழாவில் பங்கேற்றக்கூடாது எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், வருகின்ற ஜூலை 6ம் தேதி (நாளை) திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வில் தி.மு.க. அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் கலந்து கொள்ள இருப்பதாக அழைப்பிதழ் நோட்டீசில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம், பிரம்மபுரத்தைச் சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் குடமுழுக்கு விழாவிற்காக பக்தர்களிடம் நன்கொடையும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொள்ள இருப்பதாகவும் நோட்டீசில் அச்சடிக்கப்பட்டுள்ளது. விதிப்படி குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்பவர்கள் ஆண்கள் மேல் சட்டையை கழற்றிவிட்டுத்தான் பங்கேற்ற வேண்டும். அதற்கு என்று அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே பூஜைகள் செய்ய வேண்டும்.
இது போன்ற விழாக்கள் அரசு விழாவாக நடத்தப்படும்போது சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்கப்படாமல் புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதவர்களை பங்கேற்கக்கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில்களுக்கு செல்பவர்களின் மதம் பற்றி கேள்வி எழுப்பும்போது பெரும் பிரச்சனைக்கு வழி ஏற்படுத்தி விடும் என்று நீதிபதிகள் கூறினர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், கோயில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழலில் அமைச்சர் மனோ தங்கராஜ் இந்து அல்ல எனவும் குறிப்பிட்டார். எனவே அவர் இந்த விழாவில் பங்கேற்கக்கூடாது என்றார்.
அதற்கு நீதிபதிகள் கூறும்போது, பாடகர் யேசுதாஸ் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் இந்து கடவுள்களின் பாடல்களை பாடியுள்ளார். அவை கோயில்களிலும் ஒலிக்கப்படுகிறது. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கு ஏராளமான இந்துக்கள் செல்கின்றனர். எனவே இதனை குறுகிய பார்வையில் நீதிமன்றம் அணுக விரும்பவில்லை. எனவே இவை பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் எனவும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், எந்த மதத்தினரும் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர்நீதிமன்ற அளித்திருக்கும் தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பா.ஜ.க.விற்கு செருப்படி என்று குறிப்பிட்டுள்ளார். மத அரசியல் தமிழகத்திற்கு எடுபடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Vikatan