தமிழர்களை கௌரவப்படுத்தி வரும் மத்திய அரசுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நன்றி!
மதிப்பிற்குரிய இல.கணேசன் அவர்கள், இனி மணிப்பூர் ஆளுநர், தொடர்ந்து தமிழர்களை கௌரவிக்கும் மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி.
By : Thangavelu
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய இல.கணேசன் அவர்கள், இனி மணிப்பூர் ஆளுநர், தொடர்ந்து தமிழர்களை கௌரவிக்கும் மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி.
திரு.இல.கணேசன் அவர்கள் 16.02.1944ம் ஆண்டு தஞ்சாவூரில் திரு.லஷ்மி ராகவன், அலுமேலு அம்மா தம்பதிகளுக்கு 5வது மகனாகப் பிறந்தார். மூத்த அண்ணன் நாராயணன் சிறு வயதில் இல.கணேசனுக்கு ஆர்.எஸ்.எஸ் அறிமுகம் கிடைக்கச் செய்தார்.
1969ம் ஆண்டில், வீரத்துறவி ராம.கோபாலன் அவர்கள் கூட்டத்தில் அண்ணன் இல.கணேசன் அவர்கள் சங்க பிரசாரக்காக பணியாற்ற தன் 27ம் வயதில் வீட்டை விட்டு வரும்போது வீட்டில் ஒருவரிடமும் சொல்லவில்லை. ஆசிரியர் ராமரத்தினத்திற்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும். ஆசிரியர் ராம ரத்தினத்தின் மற்றொரு மாணவர் மேகாலயா முன்னாள் ஆளுநர் திரு.சண்முகநாதன்.
அப்படி சங்க பணிகளிலும், சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இல.கணேசன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் கட்டமைத்த தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவர்.
அந்தக் காலத்தில், வெற்று காலுடன் வெயிலில் நடந்தும், தாமரைக் கொடியைத் தனியே சுமந்தும், கைக்குள் அடங்கும் காரிய கர்த்தர்களை, சைக்கிளில் சென்று சந்தித்த தலைவர், அனுபவத்தில் பழுத்த அறிவுப் பகலவன், தாமரை மலர தன் வாழ்வை தந்தவர்.
தன்னிகரில்லா தத்துவ செம்மல், இலக்கியம் போற்றும் இல.கணேசன் ஐயா அவர்கள், மாற்றுக் கட்சியினரும் மகிழ்ந்து போற்றும் தலைமை பண்புக்குரியவர் இன்று மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் சமூகத்திற்காகவும், கட்சிக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்களை எல்லாம் பல துறைகளில் அடையாளம் கண்டு பதவி கொடுத்து மரியாதை செய்யும் ஒரே கட்சி பாஜக.
மேகாலயா முன்னாள் ஆளுநர் திரு.சண்முகநாதன் அவர்கள், கேரளா முன்னாள் ஆளுநர் நீதியரசர் சதாசிவம் அவர்கள், தெலங்கானா ஆளுநர் மற்றும் பதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், முன்னாள் மத்திய நெடுஞ்சாலைத்துறை, கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்கள் என்ற வரிசையில் தற்போது மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசன் அவர்களும் சிறப்பிக்கப்படுகிறார்.
தொடர்ந்து தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமித்ததன் மூலம் தமிழகத்திற்கு, தான் வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும், மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்.
ஓட்டுக்காக பதவிகளை வழங்காமல், நாட்டுக்காக உழைப்பவர்களை எல்லாம் தேடிப்பிடித்து நல்ல பதவி வழங்கும் பாரதிய ஜனதா கட்சியின் மோடி அவர்களின் நல்லாட்சி ஒரு புதிய முன்னுதாரணத்தை படைத்துக் கொண்டிருக்கிறது.
விரைவில் மணிப்பூர் ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களுக்கு பாஜக சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Bjp Twiter
Image Courtesy: Bjp