லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க'வுக்கு 25 எம்.பி.க்கள் நிச்சயம் - அண்ணாமலை அதிரடி!
By : Thangavelu
2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கட்டாயம் கிடைப்பார்கள் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடியாக கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்களுக்கு செய்யப்பட்ட நன்மைகள் பற்றி பொதுக்கூட்டங்கள் மூலமாக தெரியப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்திலும் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்று நேற்று (ஜூன் 1) திருச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் மதியம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஸ்வச் பாரத் மிஷன், அம்ருத் திட்டம், பி.எம்.கிசன், ஆதார் ரேஷன் கார்டு இணைப்பால் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டது என மத்திய பா.ஜ.க. அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் காவிரி, மேகதாட்டு, முல்லைப்பெரியாறு அணை, இந்தித் திணிப்பு உள்ளிட்ட எந்த விஷயத்திலும் தமிழர்களுக்கு எது நன்மையோ அதை மட்டும்தான் செய்து வருகிறது.
மேலும், பிரதமர் மோடி அவர்கள் அனைத்து தாய் மொழிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். அப்படி இருக்கும் சமயத்தில் தமிழக மக்களுக்கு விரோதமாக பா.ஜ.க. செயல்பட்டது இல்லை. அனைத்து மக்களும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள். இதனை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan