Kathir News
Begin typing your search above and press return to search.

ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்: தி.மு.க.வின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம் ! - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

1956ம் ஆண்டு பிறந்த மாநிலத்தை 1967ம் ஆண்டு பிறந்ததாக போலியாக சித்தரிப்பது மரபு மீறிய செயல் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம் என்றும் நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு நாளாக இருக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்: தி.மு.க.வின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம் ! - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  31 Oct 2021 1:53 PM GMT

1956ம் ஆண்டு பிறந்த மாநிலத்தை 1967ம் ஆண்டு பிறந்ததாக போலியாக சித்தரிப்பது மரபு மீறிய செயல் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம் என்றும் நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு நாளாக இருக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக' கொண்டாடப்படும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது பொருத்தமற்ற, மரபு மீறிய, உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


மொழிவாரியாக 1956ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, 'மெட்ராஸ்' என்ற பெயரில் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் தொடர்ந்து தனி மாநிலமாக இருந்தது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால். 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம் தான் தற்போதைய தமிழ்நாடு. எனவே தான், அப்போதைய மெட்ராஸ், தற்போதைய தமிழ்நாடு, நவம்பர் 1ம் தேதி தோன்றியதன் அடிப்படையில், அந்த நாளை 'தமிழ்நாடு நாளாக' அ.தி.மு.க. அரசு அறிவித்தது. இதனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார்.


இது பொருத்தமற்ற ஒன்றாகும். முதல்-அமைச்சரின் வாதத்தின்படி பார்த்தாலும் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்த 14-01-1969-ம் நாளைத் தான் 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாட வேண்டும். ஒரு குழந்தை என்றைக்கு பிறக்கின்றதோ அந்த நாள் தான் பிறந்த நாளாக கொண்டாடப்படுமே தவிர, ஒரு பெண்ணினுடைய கருப்பையில் குழந்தை உருவாகிய நாளை குழந்தை பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அவரின் வாதத்தின்படியே நியாயமற்றதாக இருக்கிறது.


இந்தச் செயல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் முன் பிறந்த மாநிலத்தை பின் பிறந்ததாக கூறுவதற்குச் சமம். இது வரலாற்றை திரித்து எழுதும் முயற்சி. 1956-ம் ஆண்டு பிறந்த மாநிலத்தை 1967-ம் ஆண்டு பிறந்ததாக சித்தரிப்பது மரபு மீறிய செயல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். எனவே, சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எல்லாம் நவம்பர் 1ம் தேதியையே அந்த மாநிலங்கள் உருவான நாளாக கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு, ஜூலை 18-ம் தேதி 'தமிழ்நாடு நாள்' என்ற அறிவிப்பினை திரும்பப் பெற்று, நவம்பர் 1ம் தேதியே 'தமிழ்நாடு நாள்' என்று தொடர்ந்து இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News