"நான் சாகும்போது நீங்க கண்ணீர் விட்டா போதும்" - விஜய் டி.வி போல் மாறிய தமிழக சட்டமன்றம் !
Tamil nadu assembly

By : Mohan Raj
"இயற்கை என்னை இறுதியாக அழைக்கும் போது உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தால் போதும்" என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் உணர்ச்சி பொங்க உரையடியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக சட்டமன்ற கூட்டத்தில் துதிபாடுவதும், உணர்ச்சிவசப்பட்டு பேசுவதும், அவர் இல்லை என்றால் நாங்கள் இல்லை என பொங்குவதுமாக சட்டமன்ற உறுப்பினர்களின் உரைகள் சின்னத்திரை சீரியல்கள் போல் மாறிவிட்டன.
அந்த வகையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தந்தை பெரியாரின் பெரும் கனவு, அதை நிறைவேற்ற வேண்டுமென அண்ணா முயற்சி செய்தார், பின்னர் கருணாநிதி அதை சட்டமாக்க வடிவமைத்துத் தந்தார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் அரியணை ஏறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் மூலமாக நம் முதல்வர் நவீன ராமானுஜராக திகழ்கிறார்" என புகழ்பாடினார்.
பின்னர் அவர் பேசியதுதான் ஹைலைட்டே, "இந்த தருணத்தில் நான் முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன், இயற்கை என்னை இறுதியாக அழைக்கும் போது, உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வரவேண்டும்" என உருக்கமாக பேசினார். எதிர்கட்சி எம்.எல்.ஏ'க்கள் சிலருக்கு இது சட்டமன்றமா இல்லை சின்னத்திரை நாடகமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
