விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை சந்திப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காரில் புறப்பட்டு சென்றபோது அவரது பாதுகாப்புபக்கு சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த 26ம் தேதி குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதில் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற விவசாயி டிராக்டர் பேரணியின்போது உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ராம்பூருக்கு பாதுகாவலர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்து கொணடிருந்த போலீசார் வாகனமும், மற்றும் பாதுகாவலர்களின் வாகனமும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.