ஸ்டாலின் கூட்டத்தில் தாக்கப்பட்ட பெண் விவகாரம்.. நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஆஜரான திமுகவினர்.!
ஸ்டாலின் கூட்டத்தில் தாக்கப்பட்ட பெண் விவகாரம்.. நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஆஜரான திமுகவினர்.!

கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை அக்கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கினார்.
இது தொடர்பாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கல் தேடப்பட்டவர்கள் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த மாதம் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் கிராமசபை கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது ஸ்டாலினிடம் பூங்கொடி என்ற பெண் எழுந்து கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் அப்பெண்ணை வெளியேற்றுமாறு கட்சி தொண்டர்களிடம் கூறினார். இதனால் அப்பெண்ணை திமுகவினர் கடுமையாக தாக்கினர். இதில் அப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன், சாமிபையன், ரங்கசாமி, ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து கைதாவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக 4 பேரும் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் 4 பேரும் கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து, முன்ஜாமின் பெற்றுகொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதனடிப்படையில், இன்று திமுகவை சேர்ந்த 4 பேரும் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் மனு மீது மாலை விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு காரணமாக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் ஏராளமானோர் போடப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.