பிரதமரை சந்திக்க 18ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர்.. கூட்டணியை உறுதி செய்வாரா.!
பிரதமரை சந்திக்க 18ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர்.. கூட்டணியை உறுதி செய்வாரா.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 18ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது பாஜக, அதிமுக இடையே தொகுதி பங்கீடு பற்றி இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்றத தேர்தலில் அதிமுக தலைமையில், பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, மற்றும் புதிய நீதிக்கட்சி இடம் பெற்றிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது அமித்ஷா பங்கேற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியை உறுதி செய்தனர்.
இதனிடையே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக முன்மொழிந்தது. ஆனால் இதனை பாஜக ஏற்க மறுத்தது. டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், நேற்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், வருகின்ற 18ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அப்போது, அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்வதுடன் எத்தனை தொகுதிகள் என்பன பற்றி இறுதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.