தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்த தே.மு.தி.க - இல்லையேல் தனித்து நிற்க முடிவு.!
தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்த தே.மு.தி.க - இல்லையேல் தனித்து நிற்க முடிவு.!
By : Mohan Raj
தமிழக அளவில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டையும், பிரச்சார யுக்திகளையும், கூட்டணி கட்சிகளையும் கிட்டதட்ட முடிவு செய்துவிட்டன. இந்த நிலையில் 41 தொகுதி தரும் கூட்டணிக்கே தே.மு.தி.க ஆதரவு என விஜயகாந்த மனைவியும், தே.மு.தி.க'வின் பொருளாருமான பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 67 மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, "தேர்தலில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன? கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. அடுத்த மாதம் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் தே.மு.தி.க.வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் தே.மு.தி.க மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதேபோல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன் தான் தே.மு.தி.க கூட்டணி அமைக்கும். இல்லையெனில் தே.மு.தி.க தனித்து களமிறங்கும்" என்ற அவர்.
"இந்த முடிவுக்கு என்ன சொல்கிறீர்கள்" என செயலாளர்களிடம் கேட்டார். அதற்கு 67 பேரும் ஒருமனதாக விருப்பம் தெரிவித்தனர்.