தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது: எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!
By : Thangavelu
விருதுநகரில் இளம் பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு முக்கிய காரணமாக திமுக பிரமுகரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேரவையில் முன்னாள் முதுலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசும்போது, இந்த வழக்கை உரிய முறையில் விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அதன் பின்னர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டது. ரவுடிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. திமுக அரசு சட்டம், ஒழுங்கை காக்க தவறிவிட்டது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi