கொள்ளை மாவட்டமாக மாறிவரும் முதல்வர் ஸ்டாலினின் பூர்வீக திருவாரூர் மாவட்டம் ! - பயத்தில் மக்கள் !
By : Mohan Raj
கொள்ளை மாவட்டமாக மாறி வருகிறது முதல்வரின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம்.
முதல்வர் ஸ்டாலினின் பூர்வீக மாவட்டமான திருவாரூர் கொள்ள மாவட்டமாக மாறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மன்னார்குடி காமராஜ் நகரில் வசித்து வரும் ரெங்கராஜ் - கிரிஜா தம்பதியினர், இரவு வீட்டுக்குள் கதவைப் பூட்டிவிட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டின் கொல்லைப்புறக் கதவை உடைத்துக்கொண்டு மர்ம நபர் உள்ளே புகுந்து, கிரிஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த சம்பவமாக கடந்த செப்டம்பர் மாதம், நன்னிலம் அருகே விசலூரில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் பாலமுருகன், தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா கிளம்பி சென்ற அடுத்த சில மணிநேரத்தில் இவரது வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை பிடிக்காமல் காவல்துறை கையை பிசைந்துகொண்டிருக்கும் நிலையில் அடுத்த சம்பவமாக தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவாரூர் அருகே கூட்டுறவு நகரில் வசித்து வருபவர் வடிவேல். இவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி கவிதா. எருக்காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினத்தில் வசித்து வந்த இவரின் தந்தை இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கடந்த 7'ம் தேதி கவிதா - வடிவேல் தம்பதியினர் தங்களது வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றிருக்கிறார்கள். அந்த சமயம் வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் கூட்டுறவு நகரில் இருந்து மாவட்ட காவல்படை மைதானம், மாவட்ட காவல் தலைமையகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே!
இந்த 3 சம்பவங்களிலும் இதுவரையும் கொள்ளையர்கள் பிடிபடவில்லை. முதல்வர் ஸ்டாலினின் பூர்வீக மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கொள்ளை மாவட்டமாக மாறியது மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.