கர்ப்பிணி தாய்மார்கள் பொருள்களில் ரூ.77 கோடி அநியாய ஊழல் - தி.மு.க அரசின் ஊழலை அம்பலப்படுத்திய அண்ணாமலை
By : Thangavelu
தமிழக அரசால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் 'நியூட்ரிஷியன் கிட்' ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்கின்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியிருப்பதால் சுமார் ரூ.77 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் அதிரடியான குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது தி.மு.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார்.
அதில், கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அம்மா நியூட்ரிஷியன் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் அம்மா என்ற பெயர் நீக்கம் செய்யப்பட்டு 'நியூட்ரிஷியன் கிட்' என்ற பெயரில் கிட் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிட் தொகுப்பில் 31.02.2022 அன்றைய முடிவின்படி, ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு 23.88 லட்சம் நியூட்ரிஷியன் கிட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏப்ரல் மாதம் தி.மு.க. எம்.எல்.ஏ., மகன் உள்ளிட்ட சிலரின் நிர்பந்தம் காரணமாக மறுபடியும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் நீக்கம் செய்யப்பட்டு தனியார் நிறுவனமான ஹெல்த் மிக்ஸ் சேர்க்கப்பட்டது. ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்கின்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும், அந்த நிறுவனத்தின் புரோ பி.எல்.மிக்ஸ்க்கான டெண்டரையும் ரத்து செய்து ஆவின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றார். இது போன்று இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்றார். தி.மு.க. ஆட்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அடியோடு அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்தையுமே ஜி ஸ்கொயர் என்ற நிறுவனம் மட்டுமே இரண்டு, மூன்று நாட்களில் அனுமதி பெற்று அனைத்தையும் விற்கத்தொடங்கியுள்ளது. இதனால் ஒரு குடும்பம் மட்டுமே முன்னேறும். மற்ற குடும்பத்தினர் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Abp