Kathir News
Begin typing your search above and press return to search.

வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது.. அதை நீக்க முடியாது.. தி.மு.க.வை மூக்குடைத்த டாக்டர் ராமதாஸ்.!

தமிழக அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை பற்றி திமுகவினர் அரசியல் மேடைகளில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னியர் இட ஒதுக்கீடுச் சட்டம் நிரந்தரமானது.. அதை நீக்க முடியாது.. தி.மு.க.வை மூக்குடைத்த டாக்டர் ராமதாஸ்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 March 2021 9:29 AM GMT

தமிழக அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை பற்றி திமுகவினர் அரசியல் மேடைகளில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடி அளிக்கும்விதமாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர்; அதை சில ஊடகங்கள் திரித்து வெளியிடுவதை விஷமப் பிரச்சாரமாகவே பாட்டாளி மக்கள் கட்சி பார்க்கிறது.




வன்னியர்களுக்கான இடப்பங்கீடு என்பது சாதிப் பிரச்சினை அல்ல... அது சமூகநீதி சார்ந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் மேற்கொண்டு வரும் சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டின் தொடக்கம் வரை நடத்தப்பட்ட அறப்போராட்டங்களின் பயனாகவும் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த மாதம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதற்கு தமிழக ஆளுனரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து வன்னியர்கள் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை நீடிக்கும். இது தான் நடைமுறையாகும்.





தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான். தமிழகத்தில் கல்வி & சமூக நிலையில் மிக மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கும் சமுதாயமும் வன்னியர்கள் தான். அதனால் அவர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் உண்மையான சமூகநீதி ஆகும். அதற்கான போராட்டத்தைத் தான் வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முன்னெடுத்தன. அதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏற்றுக் கொண்டு தான் வன்னியர்களுக்கான இடப்பங்கீட்டு சட்டத்தைக் கொண்டு வந்தார். வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு ஆகும். சட்டப்பேரவையில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதா மீதான விவாதத்தில் முதலமைச்சர் பேசும் போதும், வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு என்பது முதற்கட்டம் தான்; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அது உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார். ஆனால், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. அத்தகைய ஊடகங்களின் செய்திகளுக்கும் நாம் முக்கியத்தும் அளிக்க வேண்டாம்.





அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும்; அப்போது தான் முழுமையான சமூகநீதி மலரும் என்பது தான் எனது கொள்கை. அதற்காகவே 40 ஆண்டுகளாக போராடி வருகிறேன். 1980-ஆம் ஆண்டில் தொடங்கி 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடி, 21 உயிர்களை பலி கொடுத்து வன்னியர் உள்ளிட்ட 108 சமுதாயங்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது நான் தான். அதைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததும் நான் தான். எனது இந்த நிலைப்பாட்டை அனைத்து சமுதாய மக்களும் நன்கு அறிவர். அதுமட்டுமின்றி, அனைத்து சமுதாயங்களுக்கும் உள் ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக பாடுபடவும் தீர்மானித்துள்ளேன்.




சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, வன்னியர்களின் மக்கள்தொகை 15 விழுக்காட்டுக்கும் கூடுதல் என்பது உறுதி செய்யப்படும். அதனடிப்படையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவையும் உயர்த்தி புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும். இதுவே எனது உறுதியான நிலைப்பாடு. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News