திருமாவளவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை - VHP கோரிக்கை!
திருமாவளவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை - VHP கோரிக்கை!
By : Kathir Webdesk
இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜர் ஜீயர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், "சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையில் அனைத்து சமுதாய மக்களிடையே மத வேறுபாட்டை தூண்டி மோதலை ஏற்படுத்தும் விதமாக திருமாவளவன் பேச்சு உள்ளது. இதனால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரான சடகோப ராமானுஜ ஜீயர், "இந்து பெண்கள், தாய்மார்கள் குறித்து மிகவும் அவதூராக திருமாவளவன் பேசியுள்ளார். இது போல பேசும் தேசவிரோதிகள் தற்போது அதிகரித்து வருகின்றனர். அவர்கள் தேர்தலில் போட்டியிடும்போது இந்து மக்கள் யாரும் அவர்களுக்கு வாக்குகளை செலுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
"'கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்' என்று ஆண்டாள் கூறியதைப் போல இந்து சமுதாய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் இது போன்ற தேசவிரோத சக்திகளை வென்று விடலாம். ஏன் அவர்களைத் திருத்தி கூட விடலாம். இது போன்ற தேச விரோத சக்திகளை கூட்டணியில் சேர்ப்பதை மற்ற கட்சிகள் தவிர்க்கலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மனுதர்மத்தில் குறிப்பிட்டுள்ளது என்று கூறி இந்து பெண்கள் அனைவரையும் இழிவாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனை எதிர்த்து பல்வேறு தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.