மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.. விஜயகாந்த்.!
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டு தமிழகம் வறண்ட பூமியாக மாறும் நிலை ஏற்படும். எனவே தமிழக மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அணை கட்டாமல் தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என தமிழக அரசு கூறி வருகிறது. இவ்வாறு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி வழங்க மாட்டோம் என மத்திய அரசு கூறி வந்தாலும், அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி என்பதால் மேகதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கிடுமோ என்ற சந்தேகம் தமிழக விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தண்ணீரின்றி வறண்ட பூமியாக தமிழகம் உள்ளது. இந்த சூழ்நிலையில் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி பாசன வசதி பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டு தமிழகம் வறண்ட பூமியாக மாறும் நிலை ஏற்படும். எனவே தமிழக மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.