ரஜினியின் முடிவை ஏற்கிறோம்.. பொன்.ராதாகிருஷ்ணன்.!
ரஜினியின் முடிவை ஏற்கிறோம்.. பொன்.ராதாகிருஷ்ணன்.!

நடிகர் ரஜினிகாந்தின் முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தாலும் அதனை மனதார ஏற்றுக்கொள்கிறோம். அவர் அரசியலுக்கு வந்தால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்தவர்கள்தான் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில்: ரஜினியின் அறிக்கை ஒட்டுமொத்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும்கூட ஏற்றுக்கொள்கிறோம். ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் அரசியல் வாழ்க்கை பாழாகிவிடும் என்று எந்த அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஒட்டுமொத்தமான சிந்தனை உண்டு. எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் வரவேண்டும், அவரவர்கள் கட்சியை மிக உன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதனால் புதியவர்கள் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்றோம். பாஜக இதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.
நான் அரசியலுக்கு வந்தால் மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவனாக வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் வரவில்லை என மிகத்தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
பா.ஜ.க.,வின் சூப்பர் ஸ்டார் இன்று உலக சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய எங்கள் அரசியல் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான். அவரது பெயருக்கும், புகழுக்கும் யாரையும் சொல்ல முடியாது. பா.ஜ.க., எங்கள் கொள்கையை பரப்ப வாருங்கள் என்று ரஜினியை அழைத்தது கிடையாது. எந்த அழுத்தத்தையும் அவருக்குக் கொடுத்தது கிடையாது. கொடுக்கவேண்டிய தேவையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.