"தி.மு.க எனும் தீய சக்தி கூட்டத்தை தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது" என தன் பங்கிற்கு தி.மு.கவை சராமரியாக தாக்கியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளதாவது, "நம்முடைய இதயத்தைவிட்டு அகலாமல் ஒவ்வொரு கணமும் நம்மை வழி நடத்தி கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் பிறந்த நாள் எப்போதுமே நமக்கு சிறந்த நாள். எம்ஜிஆர் போட்டுத்தந்த பாதையில், ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஜெயலலிதாவின் லட்சியங்களை வென்றெடுத்திட உழைக்கிற நாம், ஒவ்வோர் ஆண்டும் அவரின் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக கொண்டாடி வருகிறோம்.
அந்த வகையில், ஏழை, எளிய மக்களுக்காகவே சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றிய அந்த மாதரசியின் வழியில் இல்லாதோருக்கு நலத்திட்ட உதவிகளை நீங்கள் வழங்கி கொண்டாடவுள்ளதை அறிவேன். இதுவே 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற அண்ணாவின் மொழியை தன் வாழ்நாள் முழுக்க கடைபிடித்த ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக அமைந்திடும்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில், சசிகலாவின் வாழ்த்துகளோடு தி.மு.க எனும் தீய சக்தி கூட்டத்தை தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது என்ற கடமையும் நம் கைகளில் இருக்கிறது. அதனை நிறைவேற்றுவதே, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அரும்பெரும் தலைவரான ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.
ஏனென்றால், 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் காய்ந்து போய் மக்களின் மீது பாய்வதற்கு தி.மு.க'வினர் தயாராகி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊருக்கு ஊர் எதையெல்லாம் அபகரிப்பார்கள், என்னென்ன அட்டூழியங்களை அரங்கேற்றுவார்கள், வணிகர்கள் மற்றும் சாதாரண மக்களின் நிம்மதி எப்படியெல்லாம் குலைந்து போகும் என்பதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் நமக்கு முன்பு இருக்கும் கடமையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். தமிழகத்திற்காக, தமிழக மக்களின் நலன்களுக்காக இந்த கடமையைச் சரியாக செய்து முடிக்க ஜெயலலிதாவின் பிறந்தநாளில் உறுதி ஏற்றிடுவோம்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.