புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக பதவியேற்கிறார் பா.ஜ.க எம்.எல்.ஏ செல்வம்!
By : Parthasarathy
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி உரிமை கோரியது. அதன்படி ஆளுநரை சந்தித்து கடந்த மே 7 ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸை சேர்ந்த ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.
சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பதவி தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் அந்த கட்சி எம்.எல்.ஏ. க்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது ஏம்பலம் செல்வத்தை சபாநாயகர் பதவிக்கு முன் நிறுத்துவது என்றும் அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோரை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டமன்றத்தை கூட்டி சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (புதன்கிழமை) சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வம் பெயரை பா.ஜ.க. மேலிடம் பரிந்துரை செய்தது. இதற்கிடையே சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு போட்டியிடுவோர் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் எம்.எல்.ஏ செல்வம் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சபாநாயகர் தேர்தலில் வேறு யாரும் போட்டியிடாததால் பாஜக எம்எல்ஏ செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை (16ம் தேதி) நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகராக பதவி ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.