பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்றால் புதுச்சேரி இரட்டை வளர்ச்சி காணும்-நிதின்கட்கரி.!
By : Janani
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் நடக்கவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றால் புதுச்சேரி நிச்சயம் இரட்டை வளர்ச்சியைக் காணும் என்று மத்திய சாலை போக்குவரத்துக்கு துறை அமைச்சரும் மற்றும் பா.ஜ.க தலைவருமான நிதின்கட்கரி தெரிவித்தார்.
கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய நிதின்கட்கரி, பா.ஜ.க உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் மற்றும் புதுச்சேரியின் மொத்த நிலைமையும் மாற்றும் என்றும் கூறினார். "மத்திய அரசாங்கம் எப்பொழுதும் புதுச்சேரிக்கு முன்னுரிமை அளித்துள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள் குறித்து பா.ஜ.க கருத்தில் கொண்டுள்ளது மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 50 ஆண்டுகளில் காணாத அளவுக்குப் புதுச்சேரியில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது," என்று அவர் கூறினார்.
மேலும் 20,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என்றும் கட்கரி தெரிவித்துள்ளார். திட்டங்களைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவதில் மத்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது மற்றும் புதுச்சேரியின் சமூக பொருளாதார சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றும் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் NDA கூட்டணி வெற்றிபெற்றால் யூனியன் பிரதேசம் தமிழ்நாட்டுடன் இணைந்துவிடும் என்ற முன்னாள் முதலமைச்சர் V நாராயணசாமி கூற்றுக்குப் பதிலளித்த கட்கரி, இது தவறான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார். தலைவரின் நம்பிக்கையைக் குறையும் போது இதுபோன்று மக்களைக் குழப்ப முயற்சி செய்வார் என்று குற்றம்சாட்டினார். மேலும் புதுச்சேரிக்கு மாநில உரிமை கோரும் கேள்விக்கு பதிலளித்த அவர் மத்திய அரசாங்கம் இதுகுறித்து சிந்திக்கும் என்று தெரிவித்தார்.