Kathir News
Begin typing your search above and press return to search.

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் : கவர்னர் தமிழிசை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் !

Pondicherry Budget

புதுவை  பட்ஜெட் கூட்டத்தொடர் : கவர்னர் தமிழிசை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் !

Pradeep GunasekaranBy : Pradeep Gunasekaran

  |  27 Aug 2021 8:50 AM GMT

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

சபாநாயகர் இருக்கையில் இருந்து கவர்னர் தமிழிசை தமிழில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் மூலம் மேன்மை மிகு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் நான் முதலில் வாழ்த்துகிறேன். 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தொடக்க உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதுவை ஆட்சிப்பரப்பு மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக, சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு ஒவ்வொருவரும் கடினமாக பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2021 சுதந்திரமாகவும், நியாயமான முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள்.

தேர்தல் அமைதியாக நடந்திட அரசு எந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளித்த புதுவை மக்கள், அரசியல் கட்சியினர் பாராட்டுக்குரியவர்கள்.

புதுவை மக்கள் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கு முன்னர் அவரின் தலைமையில் இயங்கிய அரசு செயல்படுத்திய மக்கள் நல கொள்கை, திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

புதிய அரசு வளர்ச்சி, வளம், மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடும் என உளமார நம்புகிறேன். இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கொரோனா பரவல் காரணமாக, 2-வது அலையின்போது பெருமளவு உயிர் சேதம் ஏற்பட்டது. இது புதுவையிலும் எதிரொலித்தது. அரசு துரிதமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதற்காக செயலாற்றிய மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் நன்றி, பாராட்டுக்கள்.

மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடமாட்ட தடைகளும், உடனடி நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கவை. சமூக இடைவெளி, முக கவசம், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்கள் பின்பற்றுவது நலனை உறுதிப்படுத்தும். உடனடியாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

நிதிநிலையை பொறுத்தவரை 2020-21-ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கான ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.8 ஆயிரத்து 419 கோடி கிடைத்துள்ளது. இது 94 சதவீதமாகும். மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.8 ஆயிரத்து 342 கோடியை அரசு செலவு செய்துள்ளது. இது 93 சதவீதமாகும்.

கொரோனா பரவல் காலத்திலும் கணிசமான வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. புதுவையில் நிதி ஆதாரங்கள் குறிப்பிட்ட அளவே உள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்திய பிறகு பெரிய சவாலாகவே உள்ளது. தவிர்க்க முடியாத செலவினங்களை கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப சீர்செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

மக்களின் விருப்பங்களை நிச்சயம் கருத்தில்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வருவாயை பெருக்கி அவற்றுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி சிறந்த நிதிநிலை அறிக்கையை முதல்-அமைச்சர் சமர்பிப்பார் என உறுதியாக நம்புகிறேன்.

2020-21-ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய திட்டங்கள், சாதனைகளை கூறியுள்ளேன். இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து அத்தியாவசிய தேவைகளான திரவ ஆக்சிஜன் சேமிப்பு திறனை அதிகரித்து கூடுதலாக 10 கிலோ கலன் நிறுவப்பட்டு ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கை 100-ல் இருந்து 235 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும் 200 படுக்கை ஏற்படுத்தும் பணி செயல்பாட்டில் உள்ளது. காவல்துறையை பலப்படுத்த புதிய காவலர்களை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். மேன்மையான அவையின் உறுப்பினர்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் திறமையான வழிகாட்டுதலின்படி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடுவீர்கள் என்றும், எதிர்வரும் காலங்களில் வறுமை, வேலையின்மை இல்லாத வளமையான பிரதேசமாக புதுவையை உருவாக்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. மக்கள், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்போடு விரைவில் கொரோனா பரவலில் இருந்து புதுவை விடுபடும் என நம்புகிறேன்.

நோயின்மை, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்ற ஐந்தினையும் பெறுவது மாநிலத்துக்கு அழகு என்ற வகையில் சீரிய முயற்சியில் புதிய உச்சத்தை அடைய உங்களின் ஒத்துழைப்பு வேண்டி உரையை நிறைவு செய்கிறேன்.

இவாறு ஆளுநர் உரை நிகழ்த்தினார்.

Maalaimalar

Next Story