கல்விக்கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது: மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி எச்சரிக்கை!
By : Thangavelu
சென்டாக் மூலமாக அரசு ஒதுக்கீட்டின்படி சேருகின்ற மாணவர்களிடம் உடனடியாக கட்டணத்தை செலுத்த வேண்டும் என தொல்லை கொடுக்கக்கூடாது என்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி எச்சரிக்கை செய்துள்ளார். கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். அதன் பின்னர் அவர்களிடம் பேசியதாவது: மாணவர்கள் அனைவரும் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு வந்துள்ளீர்கள். எனவே பள்ளியில் ஏராளமான கட்டுப்பாடுகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் கல்லூரியில் அப்படி இல்லை. நீங்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கலாம். எனவே சுதந்திரம் இருப்பதற்காக படிக்காமல் இருக்கக்கூடாது. நீங்கள் தற்போது மருத்துவக்கல்லூரிக்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு அதிகமான பொறுப்பு உள்ளது. மற்றவர்களின் உயிரை காப்பாற்றுவது ஆகும். எனவே நிறைய படித்து உங்களின் பெற்றோர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மேலும், சென்டாக்கில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குத்தான் இந்த கல்லூரியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் சிறந்த மருத்துவர்களாக வரவேண்டும். அதே சமயத்தில் சென்டாக்கில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு அரசே கட்டணத்தை செலுத்தும். மேலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டில் சேர்ந்த அனைவருக்கும் அரசே கட்டணத்தை செலுத்தும். எனவே மாணவர்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும் என தனியார் கல்லூரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
Source, Image Courtesy: Daily Thanthi