புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு !
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
By : Thangavelu
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் புதுச்சேரியில் 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு முறையான ஒதுக்கீடு வழங்கப்படாததால் இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுயேட்சை எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய பென்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய அறிவிப்பில், பட்டியலினத்தவர்களுக்கு வார்டுகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வரும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்கி உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
எனவே இந்த தவறுகளை சரி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அக்டோபர் 4ம் தேதிக்கு வேட்புமனு தாக்கலை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
Source,Image Courtesy:Puthiyathalamurai