சமூக வலைதளங்களில் ஊரடங்கு வதந்தி: ஆட்சியர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார்!
By : Thangavelu
புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிசிஐடி போலீசில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் புகார் அளித்துள்ளார்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு குழப்பமான நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சிபிசிஐடி போலீசில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புகார் கொடுத்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீண்டும் சில நாட்களாக ஊரடங்கு பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வேலை நாட்கள் கடைகள் மற்றும் சில நிறுவனங்கள் மதியம் வரை மட்டுமே செயல்படும் என தகவல்கள் பரவியது. இது போன்று பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் சிபிசிஐடி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source, Image Courtesy: Daily Thanthi