Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தைக்கு புதுச்சேரி முழுவதும் உணவு தேடிய தொழிலாளி.. ஒருங்கிணைப்பு இல்லாத நாராயணசாமி அரசு நிர்வாகம்.!

குழந்தைக்கு புதுச்சேரி முழுவதும் உணவு தேடிய தொழிலாளி.. ஒருங்கிணைப்பு இல்லாத நாராயணசாமி அரசு நிர்வாகம்.!

குழந்தைக்கு புதுச்சேரி முழுவதும் உணவு தேடிய தொழிலாளி.. ஒருங்கிணைப்பு இல்லாத நாராயணசாமி அரசு நிர்வாகம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2020 8:34 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்வதில் அரசு நிர்வாகத்தில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நிவர் புயலையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக புதுச்சேரியில் செவ்வாய்கிழமை இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் (பொ) பூர்வா கார்க் பிறப்பித்த இந்தத் தடை உத்தரவு வியாழக்கிழமை காலை முடிவடைந்தது புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.


இதையடுத்து, புதுச்சேரியில் கடைகள், வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. சிறிது நேரத்தில் அங்கு சென்ற போலீசார் கடைகள், வணிக நிறுவனங்களை மாலை 6 மணி வரை திறக்கக் கூடாது எனக்கூறி மூடச் செய்தனர். மேலும், ஆட்சியர் பூர்வா கார்க், வியாழக்கிழமை காலை 6 மணக முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காலை 9 மணியளவில் அறிவிப்பு வெளியிட்டார்.


இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். 144 தடை உத்தரவால் கடந்த 2 நாட்களாக அத்தியாவசியப் பொருள்களை வாங்காத பொதுமக்களும், வெளியூரிலிருந்து புதுச்சேரிக்கு வேலைக்காக வந்திருந்த தொழிலாளர்களும் வியாழக்கிழமை காலை பொருள் வாங்க கடைகளில் குவிந்தனர். ஆனால் போலீசாரின் தடை உத்தரவால், பொருள்களை வாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.


தொழிலாளர்கள் சிலர் சாப்பாட்டுக்கு வழியின்றி ஆங்காங்கே கிடைத்த வாழைப்பழங்களை வாங்கி பசி ஆற்றினர். தொழிலாளி ஒருவர் தனது குழந்தைக்கு இட்லி வாங்க புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றி வந்தார். இது காண்போரின் மனதை உருகச்செய்தது. இதனை கண்ட ஒருவர் அவருக்கு உணவு கொடுத்து உதவினார்.


இது பற்றி வியாபாரிகள் முதலமைச்சரிடம் முறையிட்டனர். இதனையடுத்து புதுவை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா, போலீசாரிடம் வாக்கி டாக்கியில், கடைகளை மூட வற்புறுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார். இதன் பின்னர் 11 மணியளவில் போலீசார் கடைகளை அடைக்க வலியுறுத்துவதைக் கைவிட்டனர்.


இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், வெளியிட்ட அறிவிப்பில், 144 தடை உத்தரவு பகல் 12 மணியுடன் விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன.


144 தடை உத்தரவை விலக்கிக் கொள்வதில் அரசு நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு இல்லாததே, பொதுமக்கள் வியாபாரிகளைக் கடும் அவதிக்குள்ளாக்கியது என அந்த ஊர் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இது போன்ற அரசு நிர்வாகத்தால் பொதுமக்கள் மிகவும் அவதி பெறுவதை, முதலமைச்சர் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அதற்கான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகளுக்கு பிறப்பித்திருந்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியிருக்க மாட்டார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News