திருப்பூரில் மருத்துவமனையாக மாறிய பேருந்து - கொரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் தன்னார்வலர்கள்!
By : Muruganandham
திருப்பூரில் தொண்டு நிறுவனங்களின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் பேருந்து, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனால், சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த சூழலில் திருப்பூரில் தன்னார்வலர்கள் பலர், SNS பள்ளி, சக்தி மருத்துவமனை ஆகியவை இணைந்து ஒரு பேருந்து வடிவமைப்பை மாற்றியமைத்துள்ளனர்.
மருத்துவ திரவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில், சிகிச்சைக்கான படுக்கை வசதி கிடைக்கும் வரை தொற்றாளர்கள் இந்தப் பேருந்தில் அமர்ந்து மூச்சுத்திணறலை சமாளிக்கலாம். இது போன்ற சிறிய முன்னெடுப்புகள் தான் பல உயிர்களை காப்பாற்ற உதவுகிறது.
இந்த ஆக்சிஜன் பேருந்தில், 5 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளதால் படுக்கைகள் கிடைக்காத நோயாளிகள் பேருந்தில் இருந்து சிகிச்சை பெற முடியும். மேலும், காற்றோட்ட வசதிக்காக இருக்கைக்கு நேரே மின் விசிறிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.
50 சீட்டுகள் உள்ள பேருந்தில் 12 பேர் வரையில் ஒரே நேரத்தில் ஆக்சிஜன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இயந்திரத்தில் இருந்து 2 பேர் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 25 இருக்கைகள் உள்ள ஓ2 பேருந்தில் 3 இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
50 இருக்கைகள் உள்ள பேருந்தில் 6 கான்சன்ரேட்டர்கள் மூலம் 12 பேர் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.