ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த 'விசிறி தாத்தா' - உதவிக் கரம் நீட்டிய Indic Collective.!
By : Yendhizhai Krishnan
மதுரை சித்திரை திருவிழாவிலும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்களுக்கு விசிறி வீசி வந்த 96 வயது விசிறி தாத்தா நடராஜன், ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த நிலையில், Indic Collective Trust அமைப்பு அவருக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளவர்கள் ஒரு பெரிய விசிறியை கையில் வைத்துக்கொண்டு கடவுளுக்கு மட்டுமல்லாமல் பக்தர்களுக்கும் சேவை செய்யும் விசிறி தாத்தாவை பார்த்திருப்பார்கள். 96 வயதான இவர் தனது முதுமையை பொருட்படுத்தாமல் இந்த சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
விசேஷ நாட்களில் கோவிலுக்குள்ளும் உற்சவங்களின் போது கோவிலை சுற்றியுள்ள வீதிகளிலும் மக்கள் கூட்டம் வெயிலிலும் புழுக்கத்திலும் உழலும் போது விசிறி தாத்தா தான் ஆபத்பாந்தவனாக வந்து தனது மயில் தோகை விசிறியால் உடல் மட்டுமன்றி உள்ளமும் குளிர வீசுவார். இதற்காக அவர் சன்மானம் என்று எதுவும் அவர் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் மனமுவந்து கொடுக்கும் பணத்தைக் கூட சேமித்து வைத்து சமயபுரம், பழனி, ராமேஸ்வரம், அழகர்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பிற கோவில்களுக்கு சென்று அங்கும் விசிறி சேவையில் ஈடுபட்டு வந்தார். கோவிலில் தரிசன நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் அருகில் உள்ள கடைகளில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த விசிறி தாத்தாவுக்கு கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு அவரது வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கி விட்டது.
ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில்கள் மூடப்பட்டிருக்கின்றன; சித்திரைத் திருவிழாவும் இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இவரது நிலை குறித்து இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது சமூக ஊடகங்கள் மூலம் Indic Collective Trust என்ற இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ அமைப்பின் கவனத்துக்குச் சென்றது.
Indic Collective Trust சென்ற ஆண்டே கோவில்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவித்த அர்ச்சகர்கள், மடப்பள்ளி சமையலர்கள், பூத் தொடுப்போர், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் ஊரடங்கு தொடங்கிய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒரிசா என பல மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது. அந்த வகையில் மதுரைவாசிகளின் அன்பிற்குரிய விசிறி தாத்தாவுக்கும் தேவையான உதவிகளை இந்த அமைப்பு வழங்கி இருக்கிறது.
Source: Hindu Tamil