பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை இழிவாக விமர்சித்த 8 யூ டியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் சேனல் உட்பட 8 யூடியூப் சேனல்கள் முடக்கம் மத்திய அரசு நடவடிக்கை
By : Karthiga
தேச பாதுகாப்பு குறித்து பொய் தகவல் பரப்பிய பாகிஸ்தான் சேனல் உள்பட யூடியூப் சேனல்கள் மத்திய அரசு முடக்கியது.இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சேனல் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருகிறது.
லோக்கேந்திரா டி.வி,யு அண்ட் வி.டி.வி ஏ.எம்.ரஸ்வி, கவுரவ் ஷாலி பவன் மிதிலஞ்சல், சீடாப் 5டி.எச். சர்க்காரி அப்டேட்,சப் குச் தேகா, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் நியூஸ் கி துனியா ஆகியவை முடக்கப்பட்ட சேனல்களாகும்.
இந்த 8 சேனல்களும் மொத்தம் 114 கோடிக்கும் மேற்பட்ட பார்வையிடல்களை பெற்றுள்ளன.85 லட்சத்து 73 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர்.தேச பாதுகாப்பு வெளியுறவு, பொது ஒழுங்கு தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தன. மத வழிபாட்டுத் தலங்களை இந்திய அரசு இடித்ததாகவும் மற்ற பண்டிகைகள் கொண்டாட்டத்துக்கு தடை விதித்ததாகவும் இந்தியாவில் மத ரீதியான போர் அறிவித்ததாகவும் அந்த சேனல்களில் கூறப்பட்டது.
இவை பொய்யான தகவல்கள் மட்டுமல்ல. நாட்டில் மத நல்லிணக்கத்தையும் கெடுக்கக் கூடியவை ராணுவம் குறித்தும், காஷ்மீர் குறித்தும் பொய்யான செய்திகளை பரப்பி வந்தன.
செய்தி வாசிப்பாளர்களின் தோற்றங்களும் சில சேனல்களில் அடையாளச் சின்னங்களும் அவர்கள் சொல்லும் செய்தி உண்மையானது என்று நம்ப வைக்கும் வகையில் இருந்தன. தேச பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான உறவு ஆகியவை கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த செய்திகள் உணர்வுபூர்வமானவை.
தேச ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாக அவை அமைந்திருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 102 யூடியூப் சேனல்களையும் சமூக வலைதள கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.