ஜெர்மனி: பீட்சா விநியோகிக்கும் நிலைமைக்கு சென்ற ஆப்கன் முன்னாள் அமைச்சர் !
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது சதாத் அவர்கள் தற்போது ஜெர்மனியில் பீட்சா விநியோகிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
By : Bharathi Latha
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானின் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அந்தப் புகைப்படத்தில் அவர் பீட்சாவின் டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது சதாத் அவர்கள், அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் 2018 இல் கேபினட் அமைச்சராக சேர்ந்தார். அவர் ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2020 தன்னுடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பின்னர் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இவர் குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டங்களையும் பெற்றிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இவர் குறிப்பாக 2005 முதல் 2013 வரை ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார். 2016 முதல் 2017 வரை அவர் லண்டனில் உள்ள அரியானா டெலிகாமின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் பீட்சா விற்பனை செய்யும் வேலையினால் அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளார். இது தொடர்பாக சையத் அகமது சதாத் அவர்கள் இந்த செய்தி பற்றி கூறுகையில், அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான் என்பது உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "அஷ்ரப் கானி அரசாங்கத்தின் வீழ்ச்சி இவ்வளவு விரைவாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கப்படவில்லை" என்று கூறினார்.
Image courtesy:Hindustantimes