குடிபோதையில் பஞ்சாப் முதல் மந்திரி தள்ளாடியதால் விமான நிலையத்தில் அனுமதி மறுப்பா?
ஜெர்மனியில் குடிபோதையில் இருந்த பஞ்சாப் முதல் மந்திரிக்கு விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் அரசியல் சர்ச்சை வெடித்தது
By : Karthiga
பஞ்சாப் மாநிலத்தில் ஜெர்மனி சென்றிருந்த பஞ்சாப் மாநில முதல் மந்திரி குடிபோதையில் இருந்ததால் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. பகவந்த்மான் முதல் மந்திரி ஆனார் .முதலீடுகளை ஈர்ப்பதற்காக எட்டு நாள் பயணமாக பகவந்த் மான் சமீபத்தில் ஜெர்மனிக்குச் சென்றார். பஞ்சாப் திரும்பினார். முன்னதாக அவர் ஜெர்மனியின் பிராங் பர்ட் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் ஒரு தனியார் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தார். ஆனால் அவர் மது போதையில் இருந்ததால் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பஞ்சாபில் அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பிர்சிங் சிங் பாதல் குற்றச்சாட்டுகளை தொடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
நடக்கக்கூட முடியாத அளவுக்கு மது அருந்தி இருந்ததால் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டதாக அவருடைய சக பயணிகளை மேற்கோள்காட்டி ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் நான்கு மணி நேரம் தாமதம் ஆகிய ஆம் ஆத்மியின் தேசிய மாநாட்டில் பகவந்த் மானால் பங்கேற்க முடியவில்லை. அவர் மதுபோதையில் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபிகளுக்கு தர்ம சங்கடமும் வெட்கக்கேடும் அளித்துள்ளது. இதில் பஞ்சாப் அரசு மவுனம் சாதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதை தெளிவுபடுத்த வேண்டும் தேசிய கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் மத்திய அரசு தலையிட வேண்டும். சம்பவம் உண்மையானதாக இருந்தால் ஜெர்மன் அரசிடம் பிரச்சினை எழுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் சிங் பாதல் கோரிக்கை விடுத்துள்ளார் .ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆம்ஆத்மி மறுத்துள்ளது .அதன் தலைமை செய்தி தொடர்பாளர் மல்வீந்தர் சிங் காங் கூறியதாவது:-
இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பொய்யானவை. அவர் முதலீடுகளை கொண்டு வர கடுமையாக பாடுபடுவதை பொறுக்க முடியாமல் கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.