சென்னை இசிஆர் கடற்கரையில் காவலரால் வட இந்திய பெண்ணுக்கு நேர்ந்த நிலை? டிஜிபி சைலேந்திர பாபு வரை சென்ற விவகாரம்!
By : Kathir Webdesk
சென்னை ECRகடற்கரை பகுதியில் வட இந்திய பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
மதுமிதாபைடா என்ற பெண் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14 அன்று இரவு தனது ஆண் நண்பர் ஒருவருடன் ஈ.சி.ஆர் Sea Shell Avenueபகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்மதுமிதாவிடம் அநாகரீகமாகப் பேசி கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்ததை பதிவிட்டு இருந்தார்.
காவலர் தன்னிடம் அநாகரீகமான முறையில் பேசியதாகவும், வழக்குப்பதிவு செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் அதில் தெரிவித்திருந்தார். வட இந்தியர்கள் குறிப்பிட்டு தன்னை அவதூறாக பேசியதாகவும், காவல்துறையினருக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதனை தமிழக காவல்துறையின் பெயர் குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார். மதுமிதாவின் பதிவிற்கு டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்ட காவலரின் கடுமையான மற்றும் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.