ரூ.7,662.47 கோடி செலவில் பசுமை நெடுஞ்சாலை திட்டம்: 4 மாநிலத்திற்கு கொண்டு வரும் மத்திய அரசு!
பசுமை தேசிய நெடுஞ்சாலை சரக்குப் போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
By : Bharathi Latha
உலக வங்கி நிதியுதவியுடன் நான்கு மாநிலங்களில் பசுமை தேசிய நெடுஞ்சாலை சரக்குப் போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 781 கிலோ மீட்டர் தூரத்திற்கான பசுமை தேசிய நெடுஞ்சாலை சரக்குப்போக்குவரத்துத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு 1288.24 மில்லியன் அமெரிக்க டாலர் அது குறிப்பாக இந்திய மதிப்பில் ரூ.7,662.47 கோடி என்றும், இதில் உலக வங்கியின் கடன் உதவி 500 மில்லியன் டாலர் என்றும் அமைச்சர் கூறினார். சுண்ணாம்பு, சாம்பல், பிளாஸ்டிக் கழிவு, கோகோ, சணல் நார் போன்ற உள்ளூர் பயன்பாட்டுப் பொருட்களையும், இயற்கை பொருட்களையும் பயன்படுத்தி சாலைகள் அமைப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
சாலைகள் தான் ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்பொழுது நெடுஞ்சாலைகளில் பசுமை மார்க்க நெடுஞ்சாலைகளை மத்திய அரசு தொடர்ச்சியான வண்ணம் வலியுறுத்தி வருகிறது. பசுமை நெடுஞ்சாலைகள் மூலமாக மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் தடை செய்யப்பட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது தவிர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News