திருப்பனந்தாள் மடத்தின் சுவரை இடித்து தள்ளி இருக்காங்க - தப்பு செஞ்சவாங்க யாரா இருந்தாலும் தண்டனை கொடுக்கணும்!
By : Kathir Webdesk
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி மடம் அமைந்துள்ளது. குமரகுருபரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின் குளத்தின் உள்ளே பொய்கை குளம் அமைந்துள்ளது. அதன் சுற்றுச்சுவர் 400 அடி நீளத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் இடிக்கப்பட்டது.
இது தொடர்பாக திருப்பனந்தாள் காசி திருமடம் மேலாளர் செல்வராஜ் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தின் கிழக்கு பக்கம் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவ மாணவியர் தவறுதலாக இறங்கி அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அக்குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சீடர் மடமாக இந்த திருப்பனந்தாள் மடம் உள்ளது.
மடத்துக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளது. அவற்றை சிலர் குத்தகை கொடுக்காமல் அனுபவித்து வருகின்றனர். அவர்களை குத்தகை கொடுக்க சொல்லி மடம் கேட்டுக்கொண்டது. அதனாலும் இடிக்கபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சூழலில் திருப்பனந்தாள் மடத்துக்கு தருமபுரம் ஆதீனம் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறியதாவது, தமிழக முதல்வர் கவனத்திற்கு..! நம் ஆதீன திருக்கோயில் அமைந்த இடத்தையொட்டி நம் ஆதீன சீடர்மடமாக திகழும் திருப்பனந்தாள் காசிமடத்து குளத்து மதில்சுவரை இரவு நேரத்தில் உடைத்து சேதபடுத்தியுள்ளனர். இது சைவமத்திடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனையை கொடுக்கனும் காசிமடத்து முதல்வர் குமரகுருபரரை நம் ஆதீனத்தின் சார்பில் வடநாட்டில் நடந்த மதக்கலவரத்தை நிறுத்தி சமய மதநல்லிணக்கம் செய்தவர். நாடுமுழுவதும் அறக்கட்டளை கல்வி சமுதாய பணியாற்றி வருகிறது. இதற்கு தக்கவகையில் தீர்வுகண்டு நீதியையும் அமைதியையும் சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த விரும்புகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இவ்விவகாரம் குறித்து விஷ்வ ஹிந்து பரிசுத் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.