பாட்டின் மூலம் கிடைத்த பணத்தை பசித்தவருக்கு கொடுத்து உதவிய பெண்: வீடியோ வைரல் !
தெருக்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பெண் ஒருவர் தான் பாட்டு பாடி சம்பாதித்த பணத்தை பசித்தவருக்கு அளித்த செயல்.
By : Bharathi Latha
ஒருவருடைய நல்ல குணங்களையும், கெட்ட குணங்களையும் அவர் நடந்து கொள்ளும் விதத்தை மூலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தின் படி எங்கு தவறு நடந்தாலும் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் குறிப்பாக மனித நேயம், பிறருக்கு உதவி செய்தல், செல்ல பிராணிகளின் சேட்டை, புது வித நடனம் போன்ற வீடியோக்கள் மிக விரைவிலே வைரலாகி விடும். இந்த வீடியோக்களை பார்க்கும் யாராக இருந்தாலும் ஒரு நொடி அவற்றை முழுவதுமாக உள்வாங்கி கொள்வார்கள். இதே போன்று ஒருவர் செய்த மனித நேயமிக்க செயல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
லிவ் ஹார்லேண்ட் என்கிற பெண்மணி தெருக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். அவர் பாடும் பல பாடல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவார். இப்படி தான் சில நாட்களுக்கு முன்பு எப்போதும் போல தனது இசை நிகழ்வை தெருக்களில் தொடங்கி உள்ளார். அந்த நேரத்தில் அருகில் இருந்த குப்பை தொட்டியில் ஒருவர் எதையோ தேடி கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். அங்கு எதாவது சாப்பிட கிடைக்குமா? என்று அவர் தேடி கொண்டிருப்பதை ஹார்லேண்ட் உணர்ந்தார்.
உடனே தான் பாடி கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு அவர் அருகில் சென்று 'நீங்கள் உங்களுக்கான உணவை வாங்கி கொள்ள நான் பணம் தருகிறேன். அதை விட்டு விடுங்கள்' என்று கூறியுள்ளார். பிறகு, தான் பாடியதற்காக பிறர் செலுத்திய பணத்தில் இருந்து ஒரு பங்கை எடுத்து சென்று அவரிடம் கொடுத்து "உங்களுக்கு தேவையான புதிய உணவை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள்" என்று ஹார்லேண்ட் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் பாடத் தொடங்கினார். இதை பெற்ற அந்த ஏழை மனிதர் தனது நன்றியை ஹார்லேண்ட்க்கு தெரிவிக்கும் வகையில், 'மிக்க நன்றி' என்று மகிழ்வுடன் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
Input & Image courtesy: Times now news