1500 ஆண்டு பழமையான அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தை கழிவு கற்களை கொட்டி மூடும் அவலம் - வெகுண்டு எழும் பக்தர்!
By : Kathir Webdesk
சென்னை வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் வருகிறது. கோவிலை ஒட்டி உள்ள குளம் மழையின்மையால், தண்ணீர் அடிமட்டம் அளவை எட்டி உள்ளது. இதை பயன்படுத்தி, கோவில் குளத்தை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும்.
வரும் மழைக்காலத்தில் குளத்தில் மழைநீர் தேங்க வழி வகுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. குளத்தில் மழைநீர் தேக்கினால், அதை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால் இல்லாததால், மழைக்காலத்தில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கம். சாலையில் தேங்கி வீணாகும் மழைநீரை, குளத்தில் சேகரிக்கும் வண்ணம் மழைநீர் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அகஸ்தீஸ்வரர் கோயில் குளத்தைக் கழிவு கற்களைக் கொட்டி நிரப்பி வருகின்றனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.