வாய்ப்புகளை விடாதே! உன் ஆசைகளுக்கு நீயே எல்லை! காலம் கடந்தும் பேசப்படும் கடின உழைப்பாளி! - கே.வி.ஆனந்த்
By : Mohan Raj
கலைத்துறை என்றுமே உழைப்பாளர்களையும், திறமையானவர்களையும், வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்த தெரிந்தவர்களையும் கைவிட்டதில்லை! அவர்களை காலத்தின் போக்கில் சரியான உயரத்தில் அமர வைத்தே தீரும்! அப்படிப்பட்ட ஒரு உதாரணம்தான் இன்று மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் திரு.கே.வி.ஆனந்த் அவர்கள்.
54 வயதான இவர் தனது பணியை துவங்கியது பத்திரிக்கை புகைப்பட கலைஞராக. 80'களின் பிற்பகுதியில் இருந்து 90'களின் முற்பகுதி வரை தன் ஆசைப்பட்ட புகைப்பட துறையில் தனக்கு கிடைத்த சிறு வாய்ப்புகளையும் கூட உதாசீனப்படுத்தாது சொற்ப வருமானந்தில் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக தனக்கு பிடித்தமான துறையில் பணியை துவங்கினார்.
இந்தியா டுடே, கல்கி மற்றும் சில பத்திரிக்கை'களில் இவரது புகைப்படங்கள் அந்த காலகட்டங்களில் மிகப்பிரபலம்.
பின்னர் தன் ஒளிப்பதிவு ஆசையை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முயன்ற பொழுதுதான் இவருக்கு இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்களின் அறிமுகம் மற்றும் அவரின் உதவியாளராக வாய்ப்பு கிடைத்தது. ஜீவா, எம்.எஸ்.பிரபு போன்ற ஒளிப்பதிவு ஜாம்பவான்கள் அப்பொழுது பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் மத்தியில் ஆறாவது உதவியாளராக இணைந்தார்.
கோபுர வாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா என ஒளிப்பவுக்கு பாடம் எடுக்கும் வகையான படங்களை பி.சி.ஸ்ரீராம் அவர்கள் கொடுத்ததன் பின்னணியில் உழைத்தவர்களில் இவரும் முக்கியமானவர்.
ஒளிப்பதிவின் மாஸ்டரான பி.சி.ஸ்ரீராமிடம் கற்ற வித்தையை பயன்படுத்த பி.சி.ஸ்ரீராம் அவர்களே வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். 1994'ம் ஆண்டு ஒளிப்பதிவை கொண்டாடும் மலையாள திரையுலகம் ஓர் திரைப்பட ஒளிப்பதிவிற்காக பி.சி.ஸ்ரீராம் அவர்களை அணுகியபோது நேரமின்மையால் அந்த வாய்ப்பை பரிந்துரையின் பேரில் கே.வி.ஆனந்த் அவர்களுக்கு வழங்கினார்.
"வாய்ப்புகள்தான் வாழ்க்கை"யே என உணர்ந்த கே.வி.ஆனந்த் அவர்கள் இதை தவறவிடுவார்களா? உடனே ஒப்புக்கொண்டு இறங்கி அடித்ததில் கிடைத்தது "தென்மவின் கொம்பத்" என்ற அந்த
முதல் மலையாள படத்திற்கு "தேசிய விருது". ஒளிப்பதிவாளனுக்கு முதல் பட விருது பெரும் பாக்கியம் அதிலும் தேசிய விருது ஆண்டவனின் அருள்.
பிறகு தொட்டதெல்லாம் துலங்கியது கே.வி.ஆனந்த் அவர்களுக்கு. இரண்டு மலையாளம் ஓர் தெலுங்கு என படங்களை கொடுத்துவிட்டு தமிழக்கு வந்தார். முதல் தமிழ் படம் இயக்குனர் கதிர் இயக்கத்தில் "காதல் தேசம்", இன்றைய சென்னை ஐடி பார்க், காபி ஷாப், மேம்பாலம், முறையான சாலை வசதிகள், சாலையோர பூங்காக்கள், ஸ்டைலான பேருந்து நிறுத்தங்கள் என உருமாறி இருக்கலாம் ஆனால் 25 வருடம் முன்பே அவற்றை கற்பனையில், கலையலங்காரம் மூலமும், சில காட்சிகளை மும்பையில் எடுத்ததன் மூலம் இன்று நாம் காணும் சிங்கார சென்னை'யின் மாடலை அன்றே திரையில் காண்பித்திருப்பார் கே.வி.ஆனந்த் அவர்கள்.
பின்னர் இயக்குனர் வசந்த அவர்களின் இயக்கத்தில் 'நேருக்கு நேர்'. இன்று 'சிங்கம்' வரிசை படங்களின் மூலம் நாம் கம்பீரமாக பார்க்கும் சூர்யா'வை சாதாரணமாக ஒரு இளைஞனாக இருந்த பொழுதே ஒரு ஹீரோ'வாக தன் கேமராவில் முதலில் பதிவேற்றியவர். 90'களின் சென்னையை முழுவதும் தன் கண்களால் அளந்து பதிவேற்றியிருப்பார்.
பின்னர் 1999'ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'முதல்வன்', ஓர் புகைப்பட கலைஞன் ஒளிப்பதிவின் நுணுக்கங்களை கற்றுகொள்ள பாடமாக 'முதல்வன்' படத்தையும் வைக்கலாம் என்பதை ஒரு ஒளிப்பதிவாளரே கூறும் அளவிற்கு வந்தது 'முதல்வன்' படம். அயல்நாடுகள் செல்லாமல் இந்தியாவில் இப்படிப்பட்ட பகுதிகளா என வாய்பிளக்கும் அளவிற்கு கிராமங்களை நேர்த்தியாக காண்பித்திருப்பார். பாடல்களில் அழகியல், மற்ற காட்சிகளில் பிரம்மாண்டம் கலந்த புதுமையான கேமரா கோணம் என ஒளிப்பதிவிற்கான ஆவணப்பாடம் இந்த 'முதல்வன்' படம்.
பின்னர் அதே ஷங்கர் கூட்டணியுடன் இன்னும் பிரம்மாண்டமாக 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களின் 'சிவாஜி'யில் இணைந்தார். சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' ஹீரோயிசத்திற்கும், ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கும் சற்றும் குறைவில்லாதது கே.வி.ஆனந்த் அவர்களின் உழைப்பு.
பின்னர் அடுத்தகட்ட உயர்வாகவும், தனக்கான நகர்வாகவும் இயக்குனராக தன்னை மேம்படுத்தி கொண்டார்.
தண்ணீர் பிரச்சினையையும், கந்துவட்டி கும்பலையும் மையப்படுத்திய 'கனா கண்டேன்' முதல் படம், சென்னைக்கும், உலக நாடுகளுக்குமான போதை பொருள் கடத்தலை மையப்படுத்திய 'அயன்', இளைஞர்களை வலது, இடது சாரியாக தன் போக்கிற்கு மாற்றி கொள்ளும் அரசியல் உலகை பற்றிய 'கோ', இரட்டைகுதிரையாக சூர்யாவை காண்பித்த கமர்ஷியல் 'மாற்றான்', பேன்டசியான 'அனேகன்', மீடியா சொல்வதெல்லாம் உண்மையல்ல அது ஒரு வியாபாரம் என கூறும் 'கவண்', விவசாயத்தை அரசியல் காரணியாக பயன்படுத்திய 'மாற்றான்' என இயக்குனராக குறுகிய காலத்தில் சிகரம் தொட்டார்.
தனக்கென எல்லை வகுக்காமல், தன்னையும் விட்டு கொடுக்காமல், தன் ஆசையை நிறைவேற்றி அதில் சாதனையும் புரிந்து, நினைப்பதற்கும் அதனை தொடுவதற்கும் எல்லையே கிடையாது என புரியவைத்த ஓர் உழைப்பாளி நம்மை பிரிந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.