ஒரு வருடமாக உழைக்காமல் முழு ஊதியம் வாங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - தீர்வு தான் என்ன?
By : Mohan Raj
"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்" என்பது தமிழ் மொழியில் உள்ள முதுமையான பொன்மொழி ஆகும், கற்று கொடுக்கும் ஆசிரியரை கடவுளாக பார்க்கும் சமுதாயம் நம் தமிழ் சமுதாயம் ஆகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்தையே கற்றுகொடுக்கும் குருவுக்கு அடுத்தபடியாகதான் வணங்க சொல்லியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள். அதற்கு தகுந்தாற்போல் "ஆசிரிய பணியே அறப்பணி அதற்கு முழுவதும் உன்னை அற்பணி" என்றுதான் ஆசிரிய சமுதாயம் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய உலகில் நம் தமிழகத்தில் ஆசிரிய சமுதாயம் அப்படியா இருக்கிறது என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.
கடந்த 2020 மார்ச்ச மாதம் 24-ஆம் தேதி அதிகாரப்பூர்வ ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் கூட ஊதியம் வழங்காமல் அரசாங்கம் இல்லை. ஆனால், அவர்கள் உழைப்போ முழுதாக 30 நாட்கள் கூட இல்லை. இது எந்த வகையில் நியாயம்?
ஒரு சமுதாயம் நன்கு செழித்து வளர பள்ளி ஆசிரியர்கள் முக்கியம்தான், அதனை யாரும் மறுக்க வில்லை. ஆனால், அதே சமுதாயம் உயிர்கொல்லி நோயினால் உயிரை கையில் பிடித்துகொண்டு சுவாசகாற்றிற்கு அலையும் நேரத்தில் இந்த ஆசிரியர்கள் சுகமாக வேலை பார்க்காமல் அரசு பணத்தை சம்பளமாக மாதா மாதம் 30 தேதி சரியாக வாங்குவது எந்த வகையில் நியாயம்?
இன்றைக்கும் உழைக்கும் எத்துனையோ முன்களப்பணியாளர்கள் கொரோனோ காலத்தில் உயிரை கூட பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை சிறப்பாக செய்கின்றனர். உதாரணமாக இந்த கொடிய நோய் தொற்று காலத்திலும் குப்பை அள்ளும் அரசு தூய்மை பணியாளர்கள், குழந்தையை கூட தூக்கி கொஞ்ச இயலாமல் பணிக்கு செல்லும் மருத்துவமனை செவிலியர்கள், இரவு, பகல் தூக்கமின்றி வாகனத்தை இயக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், ஊரடங்கில் சரியான குடிநீர் கூட கிடைக்காமல் வெயிலில் சீருடையுடன் அலையும் காவலர்கள் என அவர்களும் அரசு ஊழியர்கள் தான். ஆனால் அவர்கள் உயிரை பணயத் வைத்து வேலையை சேவையாக செய்கின்றனர், ஆனால் ஆசிரியர்களோ சம்பளத்தை வாங்கி கொண்டு வீட்டில்தான் உள்ளனர்.
இன்னும் கூறப்போனால், ஒரு ஆசிரியரின் சம்பளத்தை விட செவிலியர், தூய்மை பணியாளர், ஆம்புலன்ஸ் ட்ரைவர், சாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரின் சம்பளம் குறைவுதான். ஆனால் இருவரின் பணி முற்றிலும் வேறானது. ஆசிரியர் நிறைய வாங்கி கொண்டு ஓய்வு எடுக்கிறார். பிற களப்பணியாளர்கள் குறைவாக வாங்கி கொண்டு உயிரை பணயம் வைக்கின்றனர்.
இதுவே அடுத்த கல்வியாண்டில் 8 ஊதிய பரிந்துரை அரசு அமல்படுத்தவில்லை எனில் ஆசிரியர்கள் போராளிகளாக மாறி களத்தில் போராட இறங்கிவிடுவர். மாணவர்களை பற்றி கவலை கொள்ளாமல், ஆனால் எந்த தூய்மை பணியாளரும், செவிலியரும் குப்பையை விட்டு, நோயாளியை விட்டு போராட்டத்தில் இறங்கியதில்லை அதிகமாக.
நாங்கள் தான் எங்கள் ஒரு நாள் சம்பளத்தை கொடுத்தோமே பிறகு என்ன என கேள்வி எழுப்பலாம் ஆசிரியர்கள். ஒரு வருடம் ஓய்வெடுத்து சம்பளம் வாங்கிவிட்டு ஒரு நாள் சம்பளத்தை கொடுத்தால் போதுமா ஐயா? போதாக்குறைக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் அரசியல் ஈடுபாடு வேறு பல ஆசிரியர்களுக்கு. உங்களை நம்பி அரசுப்பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்கள் படிப்பில் விளையாடாதீர்கள் ஆசிரியர்களே.
இதற்கு தீர்வென்பது தனியார் நிறுவனங்களில் இருப்பது போன்று "அப்ரைசல்" எனப்படும் திறன் மதிப்பீடு வைத்து அதன்படி ஊதியம் நிர்ணயம் செய்வதே. ஆசிரியர்களுக்கு வருடத்தில் ஒரு முறை "அப்ரைசல்" வைத்து அதில் சுயமதிப்பீடு செய்து சமர்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை மதிப்பீடு அளித்து, அதில் திறமையான ஆசிரியரை ஊதிய உயர்வு, பணி உயர்வு செய்து திறமை இல்லாத ஆசிரியரை வேலையில் இருந்து அனுப்பினால் இந்த அவல நிலை மாறும். அரசுப்பள்ளி யை நம்பும் ஏழை மாணவர்களின் கல்வி தரம் உயரும்.