அறநிலையத்துறையின் அறிவிப்புகள் மூலம் இந்துக்கள் எதிரி என்ற பிம்பத்தை உடைக்க காய் நகர்த்த துவங்குகிறதா தி.மு.க?
By : Mohan Raj
ஒரு அரசியல் கட்சி தேர்தலில் தனது வெற்றி விகிதத்தை அதிகரிக்க வேண்டுமாயின் அக்கட்சி மீதான விமர்சனங்களை மாற்ற வேண்டும், குற்றச்சாட்டுகளை மக்கள் மனதில் இருந்து களைய வேண்டும். அப்படி செய்தால் அடுத்து வரும் தேர்தலில் மக்களிடத்தில் தங்கள் மீது ஏதும் விமர்சனங்களோ, குற்றசாட்டுகளோ இல்லை என பிரச்சாரம் செய்து வெற்றி விகிதத்தை அதிகரித்து ஆட்சியை தக்க வைத்துகொள்ள இயலும். இந்த யுக்தியை தி.மு.க தற்பொழுது கையில் எடுத்து இந்துக்கள் விஷயத்தில் காய்களை நகர்த்தி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி எதிர்பார்த்ததோ 200 இடங்கள் கிடைத்ததோ 156 இடங்கள் இதில் கிட்டதட்ட 50 இடங்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது தி.மு.க. கோடிகளில் செலவு செய்தும் கூட இப்படி விளிம்பு நிலையில்தான் வெற்றி வாய்ப்பை பெற முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் "இந்துக்கள் வாக்கு வங்கி", தி.மு.க'வின் இந்துக்களுக்கு எதிரான செயல்கள் போன்றவையே முக்கிய காரணம். இப்படிபட்ட பிம்பத்தை மக்கள் மனதில் இருந்து அகற்ற தி.மு.க கடந்த தேர்தலில் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று.
இந்துக்களை பழித்து பேசி பழக்கப்பட்ட தி.மு.க கோவில்களில் படி ஏற துவங்கியது, மடாதிபதிகளிடம் மண்டியிட்டது, "கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை பரப்பியவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என கல்வெட்டில் பொறித்து தமிழகத்தின் கிட்டதட்ட அனைத்து ஊர்களிலும் ஈ.வே.ரா சிலையுடன் இந்த கல்வெட்டை வைத்த தி.மு.க கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் கூட "பெரியார்" என்ற பெயரை உச்சரிக்க பயந்து நடுங்கியது, இந்துக்களை பழித்து பழக்கப்பட்டவர்களான ஸ்டாலின், துரைமுருகன் போன்றோர்களை கையில் "வேல்" தூக்கி பல் இளிக்க வைத்தது இன்னும் விட்டிருந்தால் இவர்கள் காவடி எடுத்தாலும் ஆச்சர்யமில்லை என்கிற அளவுக்கு சென்றது தி.மு.க'விற்கு கடந்த தேர்தல்.
இப்படி தி.மு.கவின் உறக்கத்தை கெடுத்த "இந்துக்கள் வாக்கு வங்கி"யை கவர்ந்தே ஆக வேண்டும் என தற்பொழுது காய்களை நகர்த்த துவங்கியுள்ளது தி.மு.க அதற்கான முதல்படிதான் இன்றைய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்புகள்.
இன்றைக்கு 5 முக்கிய அறிவிப்புகளை அறநிலையத்துறை அமைச்சர் விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அதில்,
1. கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.
2. கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்.
4. கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
5. கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும்.
மேற்கூரிய அறிவிப்புகள் மிகவும் வரவேற்கத் தக்கவைதான். இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆவணப்படுத்தப்பட்டு போலி பட்டா மூலம் அபகரிப்பு நடைபெறா வண்ணம் தடுக்க ஏதுவாக இருக்கும். ஆயிரக்கணக்கான வீட்டு மனைகள், கட்டிடங்கள் முறையாக வாடகை பாக்கி விவரங்கள் தெரிய வரும், ஆன்மீக பூமியான தமிழகத்தில் கோவில்களின் வருமானம் உயரும். இப்படி நல்ல விஷயங்கள் இந்து சமுதாயத்திற்கு நடைபெறும், ஏன் இதனை அடுத்த தேர்தலில் தி.மு.க தனது சாதனையாக பெருமையாக கூறி வாக்கு சேகரிக்க இயலும்.
இப்படியாக தங்கள கட்சியின் தூக்கத்தை பலநாள் இரவு கெடுத்த "இந்துக்கள் வாக்கு வங்கி"யை தி.மு.க கவர தனது காய்களை நகர்த்த துவங்கியுள்ளது.