Kathir News
Begin typing your search above and press return to search.

ஐயோ! கருத்து சுதந்திரம் பறிபோகிறதே என திரையுலகினர் அஞ்சும் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு மசோதா ஏன் தேவை?

ஐயோ! கருத்து சுதந்திரம் பறிபோகிறதே என திரையுலகினர் அஞ்சும் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு மசோதா ஏன் தேவை?

Mohan RajBy : Mohan Raj

  |  2 July 2021 10:30 AM GMT

திரையுலகம் எப்போதும் அரசியல் தலையீடுகளை கொண்டது. அரசு கொண்டுவரும் சட்டதிட்டங்களை அவ்வபோது ஆதரிப்பதும், பல நேரங்களில் எதிர்ப்பதும் வரலாற்றில் நடந்துள்ளது. அது ஆளும் கட்சியை பொருத்து மாறுபடும். நிலைமை தாங்கள் மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிக்கு சாதகமாக இருந்தால் திரைத்துறையினர் வரவேற்பார்கள், மாறாக தங்களின் கட்சியையும், கட்சி தலைவர்களும் பாதிக்கும்பட்சத்தில் அந்த சட்டதிட்டங்களை எதிர்த்து குரல் எழுப்பவும் தங்களின் நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் நடந்து வருகிறது. இதில் திரைத்துறையை சார்ந்த அனைவரும் ஈடுபடுவதில்லை மாறாக சில நடிகை நடிகர்கள் தங்களின் திரையுலக பயனத்திற்கு ஏதுவாக அரசியல் ஈடுபாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.


இது தற்பொழுது மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டத்திற்கும் தற்பொழுது திரையுலகை சார்ந்த சில பிரபலங்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களை காலத்தின் போக்கை கணித்து, விஞ்ஞான அடிப்படையில் வளரும் திரையுலகின் அசுர பாய்ச்சலை நெறிப்படுத்தவே இந்த திருத்தப்பட்ட ஒளிப்பதிவு வரைவு சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட உள்ளது.

இதனால் படைப்பாளிகளின் படைப்புகள் வரையறுக்கப்பட்டு அதனை அனைத்து தரப்பு மக்களும் கண்டு களிக்கும் விதமாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம், உதாரணமாக குழந்தைகள், மகளிர் போன்ற பார்வையாளர்களின் மனதில் வன்முறை, பழிவாங்கும் உணர்ச்சி, மனநலம் பாதிக்கும் அளவிற்கு அமைக்கப்படும் காட்சிகள், பாலுணர்ச்சியை தூண்டும் படைப்புகள், தனிமனித, சமுதாய சம்மந்தப்பட்ட கருத்துக்கள், ஆபாச வசனங்கள் இன்றி பேசும் வசனங்கள் ஆகியவை திருத்தத்திற்கு உட்படும் போது அதனை அனைத்து தரப்பினரும் பார்க்கும் அளவிற்கு கண்ணியமாகவும், அதே சமயம் வளரும் சமுதாயத்தை குற்ற மனநிலையில் இருந்து காக்கும் விதமாகவும் பயன்படும். இதனைதான் மத்திய அரசு இந்த திருத்தப்பட்ட ஒளிப்பதிவு வரைவு மசோதா மூலம் செய்ய நினைக்கிறது.

தற்பொழுது உள்ள நடைமுறைப்படி திரைப்படங்கள், யு, யு/ஏ மற்றும் ஏ என்று பகுக்கப்படுகின்றன. இதில், யு திரைபடங்களை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெற்றோரது வழிகாட்டுதலோடு பார்க்கலாம். ஏ திரைப்படங்கள் முற்றிலும் பெரியவர்களுக்கானது.

இது திரைப்படங்களுக்கு மட்டுமே, ஓ.டி.டி தளங்களுக்கு கிடையாது, மேலும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படைப்புகளில் வார்த்தை கட்டுப்பாடுகள் கூட கிடையாது. திரையரங்கில் வெளியாகும் படைப்பிற்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது வீட்டில் சர்வ சாதரணமாக பார்க்க வாய்ப்பிருக்கும் ஓ.டி.டி தளங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் மத்திய அரசு பார்வையாளர்களை கருத்தில் கொண்டு இவை அனைத்தையும் திருத்த ஏதுவாக திருத்தப்பட்ட ஒளிப்பதிவு வரைவு மசோதாவை கொண்டுவர எத்தனித்துள்ளது. இதன்படி யு/ஏ சான்றிதழை, வயது வாரியாக பகுப்பதற்கான வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யு/ஏ 7+, யு/ஏ 13+ மற்றும் யு/ஏ 16+ என்று பிரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஓ.டி.டி., தளங்களில் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் அதிகமான பின், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொண்டே, யு/ஏ சான்றிதழ் மேலும் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திருத்தம், நேரடியாக சினிமா திருட்டு சம்பந்தப்பட்டது. இதற்காக, 6ஏஏ என்ற தனிப்பிரிவு இணைக்கப்பட உள்ளது.


மேலும் படைப்புகளை திருடுவதை தடுக்க 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதன்படி எந்த வகையிலும், எந்த இடத்தில் இருந்தும், படத்தின் இயக்குனரது எழுத்துபூர்வமான அனுமதியின்றி, படத்தின் ஒரு சில பகுதிகளோ, முழு படமோ, ஒலி - ஒளிப்பதிவு செய்யப்படக் கூடாது. அப்படி செய்யப்பட்டால், மூன்று மாதம் முதல், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. மேலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல், மொத்த தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் உண்டு.

அடுத்தபடியாக மூன்றாவது திருத்தம், தணிக்கை சான்றிதழின் காலம் தொடர்பானது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ், 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதை காலம் முழுதும் செல்லுபடியாகும் சான்றிதழாக வழங்குவதற்கான திருத்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வரும் நான்காவது திருத்தம் தான் திரையுலகில் குறிப்பிட பலரை எதிர்த்து குரல் கொடுக்க வைத்துள்ளது. அதாவது தற்பொழுது நடைமுறையில் உள்ளபடி ஒரு திரைப்படத்துக்கு, தணிக்கை குழு சான்றளித்து, திரையரங்குகளுக்கு வந்த பின், அதை மத்திய அரசு திருத்த முடியாது.

ஆனால் புதிய திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு மசோதாவின் படி இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகவோ, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ, அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை பாதிக்கும் விதமாக. பொது அமைதி, கண்ணியம், அறநெறியை குலைக்கும் விதமாகவோ; நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் விதமாகவோ உள்ளடக்கம் இருப்பதாக புகார் வருமானால், திரையரங்கத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தாலும், அந்த சினிமாவை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழு தலைவருக்கு, மத்திய அரசு அறிவுறுத்தலாம்.

ஏனெனில் தணிக்கை துறையில் சில அதிகாரிகள் பார்த்து, அவர்களின் அப்போதைய மனநிலை படி படத்திற்கு சான்றிதழ் வழங்கிவிடுகின்றனர். ஆனால் படைப்புகள் வெளியான பின்னர் அதனை அனைத்து தரப்பின் மக்களும் பார்க்கும் சமயம் அதிலுள்ள குறைகள் மற்றும் ஒரு சாராரை புண்படுத்தி வைக்கப்படும் காட்சிகள் போன்றவை அரசின் கவனத்திற்கு வருகின்றன ஆனால் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டதால் மத்திய அரசு தலையிட முடியாத கையறு நிலை ஏற்பட்டு விடுகிறது மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் போராட்டங்கள், கருத்து மோதல்கள் என இறங்கிவிடுவதால் நாட்டில் ஏற்படும் குழப்பங்கள் ஏராளம் இதனை தடுக்கவே இந்த நான்காவது திருத்தம்.


இப்படியாக படைப்பாளிகளின் படைப்பை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் பொழுது அதனை நாட்டின் இறையாண்மைக்கும், வாழும் மக்களின் அமைதிக்கும், அனைத்து தரப்பினரின் நிம்மதிக்கும், வளரும் சமுதாயத்தின் நன்மைக்கும், குடும்ப குடும்ப உறவுகளில் ஏற்படும் இடர்பாடுகளை களையவும் மத்திய அரசின் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு வரைவு மசோதா பயன்படும்.

மேலும் இன்றைய விஞ்ஞான வளர்த்த நிலையில் அனைத்து படைப்புகளும், அனைத்து தரப்பு மக்களின் பார்வைகளுக்கும் தடையின்றி பல தளங்கள் மூலமாக கிடைக்கிறது. கட்டுப்பாடுகள் கிடையாது. ஓ.டி.டி தளங்களின் பிரத்யோக படைப்புகளை வீட்டில் அனைத்து தரப்பு பார்வையாளர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்க இயலாது, வசனங்கள் காது குடுத்து கேட்க இயலாத அவல நிலை உள்ளது. மேலும் திரைப்படங்களில் தங்களின் கற்பனை திறனை படைக்கிறேன் என்ற பெயரில் படைப்பாளிகள் இறங்குவதால் ஒரு சில சமுதாயத்தினரும், பகுதி மக்களையும் காட்டும் விதம் அவர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களும் ஏராளம் எனவே இவைகளுக்கான கடிவாளம்தான் மத்திய அரசின் இந்த புதிய திருத்தப்பட்ட ஒளிப்பதிவு வரைவு மசோதா.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News