குழப்பமான சூழ்நிலையில் ஆப்கான்: பதவிக்காக தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் தலிபான்கள்!
அதிகார பதவிக்காக தலிபான்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிடும் குழப்பமான சூழ்நிலையில் தற்போது இருக்கிறது ஆப்கானிஸ்தான்.
By : Bharathi Latha
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது முழுமையாக தாலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி சவுதி அரேபியாவில் புகலிடம் கொண்டுள்ளார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமானதாக அறிவித்த தலிபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது.
தாலிபான்களின் புதிய இடைக்கால அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தாலிபான்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய அரசு தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும், தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்தார். அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் குழுவில் இருக்கும் தீவிரமான பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு உயர் பதவிகளை பெற்றுத்தர பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தலீபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தாலிபான்கள் இதை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image Courtesy - Tribune