பொய், புளுகு, பித்தலாட்டம்: ராஜன் குழு அறிக்கையின் உண்மை விவரங்கள்!
By : TamilVani B
சமீபத்தில் நீட் தேர்வு பற்றி முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்பை பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை முன் நிறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறது இந்த குழு.
இந்நிலையில், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் உண்மை நிலவரத்தை காணலாம்.
1. நீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 7.5% இட ஒதுக்கீடு அறிமுக படுத்திய பிறகு 336 அரசு பள்ளி மாணவர்கள் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தம் 347 அரசு பள்ளி மாணவர்கள் 2020 - 2021 கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அதே சமயம் 2014 -2015 முதல் 2016 - 2017 வரை 108 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஆனால், அந்த அறிக்கையில் அதற்கு முன்னான ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்களை பற்றிய தரவுகள் தரபடவில்லை காரணம் 2007 முதல் 2016 வரை வெறும் 314 அரசு பள்ளி மாணவர்களே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த உண்மை தெரிந்தால் அவர்களின் அறிக்கை பொய் என தெரிய வரும் என்பதற்காக இதனை அவர்கள் சேர்க்கவில்லை.
2. தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நீட் ஒரு தடையாக உள்ளது:
தற்போது அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகள் ஆங்கில வழி கல்வி கற்க வேண்டும் என ஆசை கொண்டுள்ளனர். அதனால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு அரசும் ஊக்குவித்து வருவதால் அறிவியல் பாடத்தை தமிழ் வழியில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. முதலில் நீட் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் நடத்தப்படுகிறது. எனவே, தமிழ் வழி மாணவர் எண்ணிக்கையே ஆண்டுதோரும் குறையும் நிலையில், மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் விகிதாச்சார அடிப்படையில் குறையும் என்பதே எதார்த்த கள நிலவரம்.
3. CBSE மாணவர்களுக்கு நீட் சாதகமாக உள்ளது:
நீட் தேர்வுக்கு முன்பு வரை CBSE மாணவர்களால் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரவே முடியாது என்பது தான் நிலையாக இருந்தது. இந்நிலையில், அம்மாணவர்களுக்கான வாய்ப்பு சரியாக தரப்படவில்லை என்பது தான் உண்மை. நீட் தேர்வால் தமிழக பாடத்திட்டம், CBSE மாணவர்கள் என அனைத்து தரப்பும் தற்போது சரிசமமான வாய்ப்பை பெறுகின்றனர். ராஜன் கமிட்டி அறிக்கையில் CBSE பள்ளி மாணவர்கள் என்றால் பணக்காரர்களாக தான் இருக்க வேண்டும் என சித்தரித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. தனியார் மெட்ரிக் கல்லூரிகளை போலவே தான் CBSE பள்ளிகளிலும் பலதரப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
நீட் தேர்வில் CBSE மாணவர்கள் வெற்றி பெற காரணம் அங்குள்ள கல்வி சூழல் அந்த பாடமுறை மாணவர்களின் சிந்தனை ஆற்றலை அதிகரிக்கிறது. இதை தமிழக மெட்ரிக் பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தால் உயர்தர கல்வியை வழங்கும் CBSE பள்ளிகளை புறக்கணிக்க வேண்டும் என ராஜன் கமிட்டி கூறுவது அப்பட்டமான அயோக்கியத்தனம் என்றே சொல்ல வேண்டும். ராஜன் கமிட்டி CBSE பள்ளியில் பயிலும் குழந்தைகளை மாணவர்களாக கருதவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
4. நீட் கிராம புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கிறது
உண்மை நிலையை எடுத்துக் கொண்டால் 12-ஆம் வகுப்பு பாடத்தை 2 ஆண்டுகளாக சொல்லிக் கொடுத்து, மனப்பாடம் செய்ய வைத்து தான் பன்னிரெண்டாம் வகுப்பில் பல உரைவிட பள்ளிகள் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்தன. குறிப்பாக நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் இயங்கிய நூற்றுக்கணக்கான பள்ளிகள் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஆட்டுமந்தை போல மாணவர்களை 12-ஆம் வகுப்பு தேர்வுக்கு தயார் படுத்தின. இந்த மாவட்டங்களில் இருந்து 12-ஆம் வகுப்பு முடித்த செல்வந்தர் வீட்டு பிள்ளைகளுக்கு மட்டும் நீட்டுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த மருத்துவ கல்லூரிகளில் 50%-க்கும் மேலான இடங்கள் கிடைத்து வந்தது.
நீட்டுக்கு முந்தைய ஆண்டு கணக்கீடுகளில் சென்னை, கோவை போன்ற ஊர்களில் இருந்து இந்த 4 மாவட்டங்களில் உள்ள உரைவிட பள்ளிகளில் தங்கி படித்தால் அவர்கள் கிராமப்புற மாணவர்களாக கணக்குக்காட்டப்படுவர். எனவே, இந்த பாகுபாடு செய்யும் முறையே குளறுபடியில் உள்ளது என்பது தான் உண்மை.
ராஜன் கமிட்டியின் அறிக்கையை முன்னாள் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி கடுமையாக சாடியுள்ளார். இந்த அறிக்கையில் சம்பந்தமில்லாத சில தீர்ப்புகளும் அரசியலைமைப்பு விதிகளும் மேற்கோள் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் தி.மு.க அரசின் மனநிலையை பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்.