Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்களே இல்லாத இந்து சமய அறநிலையத்துறை குழு : கோவில் வருமானத்தில், பகுமானமாய் கல்லூரி கட்டும் தி.மு.க அரசு!

இந்துக்களே இல்லாத இந்து சமய அறநிலையத்துறை குழு : கோவில் வருமானத்தில், பகுமானமாய் கல்லூரி கட்டும் தி.மு.க அரசு!
X

G PradeepBy : G Pradeep

  |  26 Sep 2021 11:49 AM GMT

தமிழகத்தில் இந்து சமய அற நிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் 44,294 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோயில்கள் உள்ளன. அதில் வருடாந்திர வருமானம் ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கும் மேல் உள்ள கோவில்களின் எண்ணிக்கை மட்டுமே 2,246-க்கு மேல் உள்ளது. குறைவாக கணக்கிட்டுப் பார்த்தாலும், வருடம் ₹200 கோடிக்கும் மேல் வருமானம், தமிழக கோவில்களில் இருந்தே அரசுக்கு செல்கிறது. இதில் சொற்பனமான தொகை மட்டுமே கோவில் பராமரிப்புக்கு ஒதுக்கப்படுகிறது.

இது தவிர கோவில் நிலங்கள் முறைகேடாக தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு, அவற்றை மாற்று மதத்தினரும் அனுபவிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக கோவில் நிலங்களில் கல்லூரி கட்ட ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே பல ஆயிரம் கோடி மதிப்புடைய கோவில் நிலங்கள், கல்லூரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதாக தி.மு.க-வினர் கூறி வரும் நிலையில், மீண்டும் இந்துக்களின் மத விவகாரத்தில் அரசு தலையிடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் என்ன ஆனது? இது நாள் வரை யார் அனுபவித்தனர்?

ஆவணங்கள் படி, இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 4,78,283.59 ஏக்கர் பரப்பளவுடைய நிலங்கள் உள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை 1,23,729 குத்தகைதாரர்கள் பயிர் செய்து வருகின்றனர். இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களுக்கு வர வேண்டிய குத்தகை நிலுவை தொகைகளை வசூல் செய்யவும், விவசாய நிலங்களுக்கு நியாய வாடகை நிர்ணயிக்கவும், குத்தகை செலுத்த மறுக்கும் குத்தகைதாரர்களை வெளியேற்றவும், தமிழ்நாடு பொது பொறுப்புரிமை விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்தும் மற்றும் மேலாண்மை சட்டம், 1955 (TamilNadu Cultivating Tenants Protection Act, 1955) படி கீழ் கண்ட இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேற்கண்ட வருவாய் நீதிமன்றங்களில் 13,260 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 5,860 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ₹18.59 கோடி குத்தகை நிலுவைத் தொகை வசூலிக்க உத்தரவு பெறப்பட்டுள்ளன. அதிலும் ₹2.77 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?

திருக்கோயில் நிலங்கள் குத்தகை தொடர்பாக வருவாய் நீதினறங்களில் நிலுவையாக உள்ள வழக்குளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் நில உடைமைப்பதிவு மேம்பாட்டுத்திட்ட செயலாக்கத்தின் போது தனிப்பட்ட நபர்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையை மாற்றி, மீண்டும் அந்தந்த திருக்கோயில்களின் பெயரிலேயே பட்டா பெறுவதற்காக மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான வருவாய் துறை ஆவணங்களில் தவறாக பதியப்பட்டுள்ள விவரங்களை சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் நிலை என்ன?

தமிழ்நாட்டில் 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப கல்லூரி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம் கொளத்தூர், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் புதிதாக கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பழனியில் சித்த மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியை சார்ந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், கல்வியாளர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் திடீர் கல்வி அக்கறை ஏன்?

தமிழகத்தில் புதிய கல்லூரிகள் தொடங்கவும், அதற்கான நிதியை ஒதுக்கவும் தனி துறை இருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 புதிய கல்லூரிகள் தொடங்கப் போவதாக ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தெரிவித்துள்ளது. தங்களை கடவுள் மறுப்பாளர்கள் என அடையாளம் காட்டிக்கொண்டு, இந்து கோவில்களில் இருந்து வரும் நிதியை வைத்து, திராவிட சித்தாந்தங்களை மட்டுமே முன்வைக்கும் கல்லூரி தொடங்கப்படுவது ஏன் என ஆன்மீகவாதிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

மற்ற சிறுபான்மையின கல்லூரிகள் அரசிடமிருந்து நிதியுதவி பெறுவது போக, பல்வேறு வகையில் நன்கொடையும் பெறுகின்றன. அவற்றை முறைபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கே மத அடையாளங்களை வெளிப்படுத்தவும் தடையில்லை. ஆனால் இந்து அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகள் மட்டும் எவ்வித மத அடையாளமும் இன்றி, கோவில் நிதியை மட்டுமே வைத்து செயல்பட வேண்டும் என்றால் என்ன நியாயம்? என இந்துக்களிடையே ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.

கல்லூரி தொடங்கப்போவதாகக் கூறி தி.மு.க அரசு செய்துள்ள குளறுபடி என்னென்ன?

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரி தொடங்க, அந்தந்த பகுதியை சார்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், கல்வியாளர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அக்குழுவில் மாற்று மதத்தினரை இடம்பெறச்செய்து ஒருதலைப்பட்சமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தன்னை கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொள்ளும் கனிமொழி, கிறிஸ்துவரான கீதா ஜீவன் ஆகியோர் வழிகாட்டும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஒரு சில சிறுபான்மையின கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் கூட, அந்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் விண்ணப்பிக்க வேண்டும் என செய்தித்தாள்களிலேயே விளம்பரம் செய்யப்படும் சூழலில், திருகோயில்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், இந்துக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை விதிகள் மீறப்பட்டுள்ளதா?

1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தில் இந்து சமய திருக்கோயில்கள் தொடர்பாக ஆலோசனை வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தகுழு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைவராகவும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களை துணைத்தலைவராகவும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை அரசுச்செயலாளர் அலுவல்சார் உறுப்பினராகவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவல்சார் உறுப்பினர் – செயலராகவும் மற்றும் 9 நபர்களுக்கு மிகாமல் அலுவல்சாரா உறுப்பினர்களையும் கொண்டதாகும். ஆலோசனை குழு அமைக்க சில நெறிமுறைகள் உள்ள போது, கனிமொழி, கீதாஜீவன் போன்றோர் அக்குழுவில் இடம்பெற அந்த அடிப்படையில் தகுதி பெற்றனர் என்பது தெரியவில்லை.

ஆலோசனைக்குழு எப்படி இருக்க வேண்டும் என 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை. இந்த அரசாணையில் உள்ள அறிவுறுத்தல்கள் இம்மியளவு கூட தற்போதைய ஆலோசனை குழு உருவாக்கத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்புச்சட்டப்படி மக்களின் மத நம்பிக்கையில் அரசு தலையிடக்கூடாது என்றிருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்துக்களுக்கு மட்டும் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டு வருகின்றன. மற்ற மதத்தினரை வரைமுறைக்குள் கொண்டு வர, பெயரளவில் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News