ஒன்பது மாதங்கள் உயிரைக் கொடுத்து ஆதிசங்கரர் சிலையை வடித்த சிற்பி!
By : Shiva
நவம்பர் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆதி குரு சங்கராச்சாரியாரின் 12 அடி பெரிய கல் சிற்பம் மைசூருவின் சரஸ்வதிபுரத்தில் உள்ள சிற்பி அருண் யோகிராஜின் பட்டறையில் இருந்து கேதார்நாத்தில் உள்ள சமாதி ஸ்தலத்திற்கு இந்திய விமான படை மூலம் கேதர்நாத்திற்க்கு சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஆதிசங்கரரின் சிலை தயாரிப்பதற்கான பணியை மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு போட்டியாளர்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருண் யோகிராஜ். சிலை செய்வதற்கான முயற்சியில் பிரதமரே தலையிட்டு அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தது அருணுக்கு
கூடுதல் சவாலாக இருந்தது. இதுகுறித்து அருண் கூறுகையில், "இது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது. ஏனென்றால் இந்த சிலை தயாரிப்பதற்கான முயற்சியில் பிரதமரே நேரடியாக தலையிட்டு சிலை தயாரிப்பதற்கான அனைத்து அம்சங்களையும் தெரிவித்ததுடன் சிலை தயாரிப்பு பணிகளை அவ்வப்போது கேட்டறிந்தார்" என்று அவர் தெரிவித்தார்.
அருண் இரண்டு அடி அளவுள்ள மாதிரி சிலை ஒன்றை உருவாக்கும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தென்னிந்தியா முழுவதும் உள்ள சிலைகளை ஆய்வு செய்து அதன் முக்கிய அம்சங்களையும் பரிமாணங்களையும் ஆய்வு செய்தார். சிருங்கேரி மடம், மைசூரில் உள்ள சங்கர மடம் மற்றும் பிற முக்கிய மதத் தலைவர்கள் மற்றும் மடங்களிடம் இருந்தும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.
சிலை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் தான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி சிலையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அருணுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக சிலை செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் 'கிருஷ்ண சிலா' எனப்படும் கருங்கல் ஆதிசங்கரர் சிலை வடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான கல் கர்நாடகாவின் ஹெச்.டி.கோடே பகுதியில் இருந்து தருவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நடந்த இந்த சிலை வடிக்கும் படி ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போன்று இருந்ததாக அருண் கூறியுள்ளார். அருணுடைய மூதாதையர்கள் மைசூரு அரச குலத்தின் பரம்பரை சிற்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தாத்தா, அப்பா வரிசையில் யோகி ராஜ் ஐந்தாவது தலைமுறை சிற்பி. இந்த சிலையை வடித்ததன் மூலம் தனது பெயரைக் காப்பாற்றுவார் என்ற தாத்தாவின் வாக்கு நிறைவேறியதாக அருண் தெரிவித்துள்ளார்.
மைசூரு அரச குலத்தால் நிர்மாணிக்கப்பட்ட காயத்ரி தேவி மற்றும் புவனேஸ்வரி தேவி கோவில்களில் அருணுடைய தாத்தா பசவண்ணா ஷில்பி பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் உள்ள காவேரித் தாயின் சிலையும் அவரால் தான் செதுக்கப்பட்டது. அரச குலத்தின் பரம்பரை சிற்பியாகத் திகழந்த ஷில்ப ஸ்ரீ சித்தலிங்க சுவாமியிடம் சிற்பக் கலை கற்றவர் தான் பசவண்ணா ஷில்பி.
10 வயது சிறுவனாக சித்தலிங்க சுவாமியின் குருகுலத்தில் சேர்ந்த பசவண்ணா 1953ல் சிற்பக் கலையில் தேர்ந்து வெளியேறினார். அப்போதையை மைசூரு அரசர் ஜெயசமராஜேந்திர உடையாரின் உத்தரவின் பெயரில் காயத்ரி தேவி கோவிலை முழுக்க முழுக்க அவரே வடிவமைத்துள்ளார்.
அவரது வழியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பை தான் வடித்ததால் நெகிழ்ச்சியாக உணர்வதாக அருண் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மைசூரு பல்கலையில் எம்.பி.ஏ பட்டம் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்த அருண் தான் கற்களுக்கு உயிர் கொடுக்கும் கலையில் ஈடுபடுவோம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.
எனினும் குழந்தையாக இருக்கும் போதே அருண் தனது மரபையும் பெயரையும் காப்பாற்றி தனக்கு புகழ் ஈட்டித் தருவார் என்று தனது தாத்தா கூறியதாக அருண் கூறியுள்ளார். 37 வருடங்களுக்குப் பின் தான் அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நெகிழ்ச்சியடைகிறார் அருண்.
அது வரை ஒரு பொழுதுபோக்காக சிற்பம் பழகிய அருண் தனியார் நிறுவன பணியை தனக்கு ஏற்றது அல்ல என்று முடிவு செய்து உதறி விட்டு 2008ஆம் ஆண்டில் இருந்து முழுநேர சிற்பியாகவே மாறி விட்டார். அது வரை அவரது தந்தை எம்.பி.ஏ முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அருண் எப்படி தாத்தாவின் அருள்வாக்கை நனவாக்க முடியும் என்று கேலி செய்வாராம்.
அருணுக்கு குருவாக இருந்து அவரது தந்தை சிற்பக் கலையைக் கற்றுக் கொடுத்த நிலையில், அவரது கற்பித்தலுக்கு பலன் கிடைக்கும் சமயத்தில் துரதிருஷ்டவசமாக ஒரு விபத்தில் இறந்து விட்டார். எனினும், ஆதிசங்கரர் சிலையை செய்து முடித்த பின் பார்வையிட்ட அவர், தாத்தாவின் புகழைக் காப்பாற்றி விட்டாய் என்று ஆனந்தக் கண்ணீருடன் பெருமிதம் கொண்டுள்ளார். தற்போது அந்த நினைவு மட்டுமே அருணிடம் எஞ்சி நிற்கிறது.
மைசூருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெயசமராஜேந்திர உடையாரின் 14.5 அடி பளிங்குச் சிலையும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலையும் அருணின் கைவண்ணம் தான். மைசூரு ரயில் நிலையத்தில் உள்ள கலைநயம் மிக்க பல சிலைகளும் அவர் வடித்தவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : Swarajya