அம்பேத்கர் பிறந்தநாள் - மத்திய அரசு அளித்த கெளரவம், மாநில அரசு செய்த விளம்பரம்
By : Mohan Raj
பத்து நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை விழாவாக கொண்டாடுவதாக அறிவித்து பின்னர் கடந்த வாரம் அம்பேத்கர் பிறந்த நாளை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாக அறிவித்த நிலையில் நாளை கொண்டாடப்படும் அம்பேத்கரின் பிறந்தநாளை இன்று 'சமத்துவ நாளாக' அறிவித்து முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க அரசு விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறது.
இன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110'ன் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், "அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14'ம் தேதி தமிழகத்தில் சமத்துவ நாளாக கொண்டாடப்படும், அம்பேத்கரின் பிறந்த நாளன்று தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்படும்" என குறிப்பிட்டார்.
ஆனால் கடந்த மார்ச் மாதம் 29'ம் தேதி அதாவது அம்பேத்கர் பிறந்தநாளுக்கு 15 தினங்கள் முன்னரே டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா முக்கியத்துவத்தை பா.ஜ.க'வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. இதில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பா.ஜ.க எம்பிக்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, "பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14ஆம் தேதி வருவதையொட்டி ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்கி 16'ஆம் தேதி வரை சமூக நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூகநீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி அப்பொழுது கேட்டுக்கொண்டார். குறிப்பாக பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்பால் தெரிவித்தார்.
மேலும் அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 3'ம் தேதி பிரதமர் மோடி தனது அறிவிப்பில், "இனி அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் மத்திய அரசின் அனைத்து துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை" என குறிப்பிட்டார். இப்படி அம்பேத்கரின் பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என 15 நாட்கள் முன்பே அறிவித்தும், கடந்த வாரம் அம்பேத்கரின் பிறந்த நாளை விடுமுறையாக அறிவித்தும் மத்திய அரசு கௌரவித்தது.
ஆனால் விளம்பரப் பிரியரான தமிழக அரசோ நாளை அம்பேத்கர் பிறந்த நாள் என்று இருக்கும்போது இன்று அவரது பிறந்த நாளை, 'சமத்துவ நாள்' என்று அறிவிக்கிறது. இதற்கு சொல்லி வைத்தாற்போல் திருமாவளவன் "ஆஹா, ஓஹோ" என புகழ்கிறார். 15 நாட்கள் முன்னரே திட்டமிட்டு நம் நாட்டின் சட்ட மேதைக்கு மத்திய அரசு மரியாதை செலுத்தும் விதமாக அறிவிப்புகள் வெளியிட்டது. ஆனால் விளம்பர பிரியரான தி.மு.க அரசோ பெயரளவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு "நாங்களும் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதையை செய்கிறோம்" என தம்பட்டம் அடித்துக்கொள்கிறது.